யாழ்ப்பாணம் - அரியாலைப் பகுதியில் கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் நகைகளுடன் ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய அரியாலையில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 450000 பெறுமதியான களவாடப்பட்ட பணம் மற்றும் 20 பவுண் தங்க நகைகள் என்பன குறித்த வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் யாழ்.குடா நாட்டில் பல்வேறுபட்ட இடங்களில் வழிப்பறி மற்றும் நகைத்திருட்டுக்கள் இடம்பெற்று வரும் நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸாரினால் குறித்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் 5 பேரும் 20 தொடக்கம் 25 வயதினையுடையவர்களெனவும் சந்தேகநபர்களை இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.