வவுனியாவில் திடீரென உயிரிழக்கும் கால்நடைகள்: வாழ்வாதாரத்தை இழக்கும் மக்கள்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் உள்ள வயல்வெளிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கால்நடைகள் உயிரிழக்கும் நிலையில் அவற்றை அப்பகுதியில் இருந்து அகற்றாமையால் அங்கு துர்நாற்றம் வீசுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியா - நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட குழுமாட்டுச்சந்தி பகுதிக்கு அண்மையில் உள்ள வயல் நிலப் பகுதியில் கடந்த சில நாட்களாக மேய்ச்சலில் ஈடுபட்ட கால்நடைகள் சில நேற்று உயிரிழந்துள்ளன.

இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதுடன், இந்த விடயம் கால்நடை வளர்ப்பாளர்களிடையே அச்சத்தையும் தோற்றுவித்துள்ளதாக தெரியவருகிறது.

மேலும் பல கால்நடைகள் உயிருக்கு போராடி வருவதுடன், இதனால் பல குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் வவுனியா அரச கால்நடை வைத்திய அலுவலகத்தினை எமது செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது,

எமது அலுவலகத்தில் பணியாற்றும் கால்நடை வைத்தியர் சுகயீன விடுமுறையில் உள்ளமையினால் எம்மால் சம்பவ இடத்திற்கு சமூகமளிக்க முடியாது எனவும், பதில் கடமைக்கு எவரும் இல்லையெனவும் பதிலளித்துள்ளனர்.