யாழில் நகைகள், பணம் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

Report Print Sumi in சமூகம்

யாழ். அரியாலை பகுதியில் இரு வீடுகளில் நகைகள், பணம் என்பவற்றை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போதே சந்தேகநபர்களை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களில் இருவர் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தனர் என்றும், மற்றுமொருவர் வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸாரால் தனித்தனியே பி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அரியாலை, கனகரட்ணம் வீதியில் உள்ள வீடொன்றிலும் ஏவி வீதியில் உள்ள வீடொன்றிலும் அண்மையில் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை பட்டப்பகலில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றன.

தாலிக்கொடி உள்ளிட்ட பெறுமதியான நகைகள் திருடப்பட்டிருந்தன. அவை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வீடுகளின் உரிமையாளர்களால் முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன.

அதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார், தடயங்களின் அடிப்படையில் நேற்று அரியாலையில் உள்ள வீடொன்றில் தேடுதலை முன்னெடுத்தனர்.

அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 19 பவுண் 6 கிராம் தங்க நகைகளை கைப்பற்றியிருந்தனர்.

அங்கு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளின் அடிப்படையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 22 தொடக்கம் 25 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்றிரவு முற்படுத்தப்பட்டனர்.

அரியாலையில் உள்ள வீடொன்றில் 6 தங்கப் பவுண் தாலிக் கொடி உள்பட 11 பவுண் 2 கிராம் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒரு பி அறிக்கையும், மற்றொரு வீட்டில் 8 பவுண் 4 கிராம் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் மற்றொரு பி அறிக்கையும் 5 சந்தேகநபர்களுக்கு எதிராக பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டன.

அத்துடன், இரண்டு சந்தேகநபர்களின் உடமையிலிருந்து 1900 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டதாக தனித் தனியே இரண்டு பி அறிக்கைகளும், சந்தேகநபர் ஒருவர் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டார் என தனியான ஒரு பி அறிக்கையும் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டன.

பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட 5 பி அறிக்கைகளையும் ஆராய்ந்த நீதிவான் ஏ.பீற்றர் போல், சந்தேகநபர்கள் ஐவரையும் வரும் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.