குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம்

Report Print Ajith Ajith in சமூகம்

மிக் 27 ரக விமானக் கொள்வனவில் பாரிய மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரஸ்யாவுக்கான முன்னாள் தூதர் உதயங்க வீரதுங்க நேற்று கோட்டை நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோது குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நடந்துக்கொண்ட விதம் குறித்து நீதிவான் கேள்வி எழுப்பினார்.

உதயங்க வீரதுங்கவை முன்னிலைப்படுத்தியபோது பொது உடமைகள் சட்டத்தின்கீழ் உள்ள நடைமுறைகளை குற்றப் புலனாய்வுத்துறையினர் பின்பற்றவில்லை. இது கேள்விக்குரிய விடயம் என்று நீதிவான் ரங்க திசநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் மிக் 27 ரக விமானக்கொள்வனவில் 7 மில்லியன் டொலர்கள் அரசாங்கத்துக்கு நட்டமேற்பட்டுள்ளது.

இதனைக்கருத்திற்கொண்டு சந்தேக நபருக்கு பிணை வழங்கமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை மிக் 27 விமானக்கொள்வனவு மோசடி விடயத்தை விசாரணை செய்த காவல்துறை அதிகாரி நிஹால் பிரான்சிஸ் தற்போது விசாரணையில் இருந்து நீக்கப்பட்டமைக்கான காரணத்தை நீதிவான் வினவினார்.

இதற்கு பதிலளித்த நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி, அவர் இடமாற்றம் பெற்று சென்று விட்டதாக கூறினார். தற்போது யார் விசாரணைகளை முன்னெடுத்து செல்கிறார் என்று நீதிவான கேட்டதற்கு சஞ்சீவ என்பவர் என்று பதில் வழங்கப்பட்டது.

இந்த விசாரணைகளை 2015ஆம் ஆண்டில் இருந்து முன்னெடுத்து சென்ற நிஹால் பிரான்ஸிஸ் ஏன் இடமாற்றப்பட்டார் என்று நீதிவான் கேள்வி எழுப்பினார்.

இதற்கு தமக்கு தெரியாது என்று குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி பதில் வழங்கினார். எனில் தற்போது விசாரணையை முன்னெடுத்துசெல்லும் அதிகாரி இது தொடர்பான அறிவைக்கொண்டிருக்கிறாரா? என நீதிவான் கேட்டார்.

அவர் விசாணைகளை முன்னெடுத்து வருகிறார் என்று இதற்கு பதிலளிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த சம்பவத்தின் விசாரணைகளை முன்னெடுக்கவும் சந்தேகநபரிடம் இருந்து வாக்குமூலங்களை பெறுவதற்கும் 10 நாட்கள் வரை செல்லும் என்று குற்றப்புலனாய்வுத்துறை பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

எனினும் தற்போது விசாரணை தொடர்பான தெளிவில்லாமல் எப்படி விசாரணை முடிந்துவிட்டது என்று கூறமுடியும் என்று நீதிவான் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்காத குற்றப்புலனாய்வு அதிகாரி மௌனமாக இருந்தார். இதன்போது நீதிவான், இலங்கை காவல்துறையினருக்கு என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பினார். இதன்போதும் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி மௌனம் காத்தார்.

இந்தநிலையில் விசாரணையை முன்னெடுத்து முன்னாள் அதிகாரியின் ஒத்துழைப்பை பெற்று விசாரணையை தொடரமுடியுமா என்ற நீதிவான் வினவினார்.

தமது தரப்பில் ஆட்சேபனைகள் இல்லை என்று இதன்போது குற்றப்புலனாய்வுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தவேளையில் குற்றவியல் நீதியின்படி ஒரு விசாரணையாளரை நீக்கவும் அவரை மீண்டும் விசாரணையில் ஈடுபடுத்தவும் முடியும் என்ற அடிப்படையில் பதில் காவல்துறை அதிபரிடம் இந்தவிடயத்தை கேட்டறிவது என்று தீர்மானித்தார்.

இதன்போது இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு வந்த முன்னாள் அதிகாரியை மீண்டும் அதே விசாரணைக்கு நியமிக்க இருக்கும் சிக்கல்கள் என்ன என்பதை அறிந்துக்கொள்ளமுடியும் என்று நீதிவான் குறிப்பிட்டார்.

குறித்த விசாரணைக்கு முன்னாள் காவல்துறை அதிகாரி பிரான்ஸிஸ் நியமிக்கப்படாவிட்டால் அவர் நியமிக்கப்படும் வரை தற்போதைய விசாரணையாளரை நீக்கமுடியும் என்று நீதிவான் தெரிவித்தார்.

இதற்கு அப்பால் ஏற்கனவே சந்தேகநபர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கைகளில் ஏமாற்று மற்றும் பணச்சலவை குற்றங்களின் கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள பி அறிக்கையின்படி பொதுச்சொத்துக்கள் என்ற குற்றச்சாட்டின்கீழ் மாத்திரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையை நீதிவான் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இந்த சட்டத்தின்கீழ் சந்தேகநபர் மன்றில் முன்னிலையாக்கப்படுவதற்கு முன்னர் 25ஆயிரம் ரூபாவுக்கு அதிக தொகையானால் உதவி காவல்துறை அத்தியட்சகரின் சான்றிதழ் பெறப்படவேண்டும்.

எனினும் அதனை குற்றப்புலனாய்வுத்துறையினர் சமர்ப்பிக்கவில்லை. 7 மில்லியன் டொலர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு நட்டமேற்படுத்திய இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஏன் இதனை குற்றப்புலனாய்வுத்துறையினர் கவனத்தில் கொள்ளவில்லை என்று நீதிவான் கேள்வி எழுப்பினார்.

இதன்போதும் குற்றப்புலனாய்வுத்துறையின் அதிகாரி மௌனமாக இருந்தார். இதற்கிடையில் விசாரணைகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெறவேண்டும் என்று ஏற்கனவே குற்றப்புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் தற்போது அந்த ஆலோசனை இல்லாமலேயே காவல்துறை விசாரணையை முடித்திருக்கிறது. எனவே இந்த விடயத்துக்கும், தீர்வுக்காணப்பட வேண்டும் என்று நீதிவான் கேட்டுக்கொண்டார்.