இராணுவ லான்ஸ் கோப்ரலுக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை வழங்க நீதிபதி இளஞ்செழியன்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - மூதூர், பாரதிபுரம் பகுதியில் தமிழரொருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் இராணுவ லான்ஸ் கோப்ரலுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நிலாவெளி - இக்பால் நகர், ஏழாம் கட்டை பகுதியைச் சேர்ந்த மொஹிதீன் முகம்மது நிபாஸ் (50 வயது) என்பவருக்கே கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மூதூர் 58ஆவது இராணுவ முகாமில் கடமையாற்றி கொண்டிருந்த வேளையில் 2006ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி 40 வயதான குடும்பத்தர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ அதிகாரி, குறித்த நபரை சுட்டுக் கொலை செய்தமை நிரூபணமான நிலையில் குறித்த வழக்கு தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்கு தொடரப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்திலேயே நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்பட்டு இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் குற்றவாளியான 50 வயதுடைய மொஹிதீன் முகம்மது நிபாஸ் என்பவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனை வழங்குமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.

சக இராணுவ வீரரின் துப்பாக்கியை எடுத்துக் கொண்டமை, இராணுவ உயர் அதிகாரிக்கு தெரியாமல் மோட்டார் சைக்கிளில் பாரதிபுரம் சென்றமை, இராணுவ அனுமதி இல்லாமல் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து கொலை செய்தமை, தப்பி சென்றமை என்பன இராணுவ ஒழுக்க விதி மீறல்கள் ஆகும்.

எதிரியான இராணுவ சிப்பார் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தபோது, துப்பாக்கி பிரயோம் செய்து கொலை செய்ததை ஏற்றுக்கொண்டார்.

வேண்டும் என துப்பாக்கி பிரயோகம் செய்து கொலை செய்யவில்லை எனவும் வீதியில் வந்த குடும்பத்தர் மீது சந்தேகம் ஏற்பட்டு காலிற்கு கீழ் எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு நடத்திய போது துப்பாக்கி சன்னம் அவரின் வயிற்றில்பட்டு விட்டதாக சாட்சியம் அளித்தார்.

எதிரியான இராணுவ உத்தியோகத்தர் அவரது சிறிய வயதில் இந்திய இராணுவம் இருந்த காலக்கட்டத்தில் ஈபிஆர்எல்எப் அமைப்பினால் பலவந்தமாக பிடித்து செல்லப்பட்டு கட்டாய ஆயுதப் பயிற்சி தனக்கு வழங்கப்பட்டதாககும் அதன் பின்னரே தான் இராணுவத்தில் இணைந்ததாகவும் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

எதிரிக்கு எதிராக மூன்று இராணுவ உத்தியோகத்தர் மற்றுமு் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் சாட்சியம் அளித்திருந்தனர்.

இதன்போது எதிரி கொலைக்காக பயன்படுத்திய துப்பாக்கியின் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அநியாயமான முறையில் அப்பாவி குடும்பத்தரை இராணுவ அதிகாரி கொலை செய்தமையை சுட்டிக்காட்டி தண்டனை விதிதித்து நீதிபதி இளஞ்செழியன் குறித்த அதிகாரி சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.