மட்டக்களப்பில் போதைப்பொருளுக்கு எதிராக கையெழுத்துப்பெறும் போராட்டம்

Report Print Kumar in சமூகம்

போதைப்பொருளுக்கு எதிராக கையெழுத்துப் பெறும் போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருளினால் ஏற்படும் அழிவினை தடுப்போம் இளம் தலைமுறையினை பாதுகாப்போம் என்னும் தலைப்பில் குறித்த கையெழுத்துப்பெறும் போராட்டம் இன்று நடைபெற்றுள்ளது.

போதைப்பொருளினை இலங்கையில் இருந்து முற்றாக ஒழிக்கும் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியை கோரும் வகையில் 50ஆயிரம் கையெழுத்துக்களை பெறும் குறித்த போராட்டத்தினை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்,தேசிய மீனவ பெண்கள் சமூகம், மட்டக்களப்பு மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் என்பன இணைந்து மேற்கொண்டிருந்தன.

எதிர்வரும் மார்ச் எட்டாம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினத்தன்று ஜனாதிபதியிடம் இந்த கையெழுத்துகளை கையளிக்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 15மாவட்டங்களில் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் இவ்வாறு பெறப்படும் கையெழுத்துக்கள் மனுக்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் சர்வதேச மகளிர் தினத்தன்று கையளிக்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

இருக்கும் சட்டத்தினை பயன்படுத்தி போதைப்பொருளால் ஏற்படும் அழிவுக்கு சிறந்த தீர்வினை வழங்க வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் மக்களின் ஆலோசனைகளைப்பெற்று புதிய சட்டத்தினை உருவாக்கி போதைப்பொருளில் இருந்து இந்த நாட்டினை பாதுகாக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டு நிற்கின்றோம், என்று தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க தேசிய அமைப்பாளர் அன்டனி ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் போதைப்பொருள் பாவனையினால் இளம் சமூதாயம் அழிந்து செல்வதுடன் குடும்பங்கள் மத்தியிலும் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாகவும் அவற்றினை தடுக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க தேசிய அமைப்பாளர் அன்டனி ஜேசுதாசன்,திட்ட இணைப்பாளர் லவீனா உட்பட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள், தேசிய மீனவ பெண்கள் சமூக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.