கோறளைப்பற்று உணவகங்களில் விசேட சோதனை நடவடிக்கை

Report Print Navoj in சமூகம்

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கோறளைப்பற்று உணவகங்களில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு- கோறளைப்பற்று பகுதியிலுள்ள பேருந்து தரித்து நிற்கும் உணவகங்கள் மற்றும் பழக்கடைகளில் உணவு மற்றும் உணவகங்களின் சுகாதார நிலை தொடர்பில் குறித்த சோதனை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது பல உணவகங்களில் ஈக்கள் அதிகம் காணப்பட்டமை, உணவகம் அசுத்தமாக காணப்பட்டமை, பழைய பொருட்கள் பாவித்தமை, குளிர்சாதன பெட்டியில் உணவுகள் வைத்திருந்தமை, கழிவு நீர் ஒழுங்காக வெளியேற்றாமை, சமையலாளர்கள் மற்றும் வேலையாட்கள் சுகாதார உடைகளின்றி காணப்பட்டமை போன்ற பல சுகாதார சீர்கேடான பிரச்சனைகள் இனங்காணப்பட்டுள்ளன.

இதில் சுகாதார சீர்கேடான முறையில் காணப்பட்ட உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மூன்று தினங்களில் குறித்த உணவகங்களில் மீண்டும் சோதனைகளை மேற்கொள்ளும் போது உணவகங்கள் ஒழுங்கான முறையில் சுகாதாரத்துடன் இல்லாதுவிட்டால் உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்று சுகாதார வைத்திய அதிகாரிகளால் குறித்த உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.பி.எம்.முகைதீன் தலைமையில் இடம்பெற்ற விசேட சோதனையில் சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.நசீர், ஏ.ஆர்.ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.