கிழக்கில் அரச நியமனங்களில் துறை சார் பட்டதாரிகளுக்கு முன்னுரிமையளிக்க வேண்டும்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கிழக்கு மாகாணத்தில் நிலவி வருகின்ற சமூக சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களுக்கு சமூகப் பணி டிப்ளோமாதாரிகள், சமூகப் பணி பட்டதாரிகளை விசேடமாக உள்ளீர்க்க வேண்டும் என கிழக்கு மாகாண ஐக்கிய தொழில்வாண்மையான சமூகப் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் தில்லையம்பலம் ஹரிஸ்ரன் தெரிவித்துள்ளார்.

தம்பலகாமத்தில் உள்ள குறித்த சங்கத்தின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கையில் ஒரேயொரு சமூகப் பணி கல்லூரியாக சமூக சேவை அமைச்சின் கீழ் உள்ள தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகம் காணப்படுகிறது.

தொழில்வாண்மையிலான இரு வருட முழு நேர சமூகப் பணி டிப்ளோமா, நான்கு வருட சமூகப்பணி பட்டம் என்பன காணப்படுகிறது. இது கடந்த காலங்களில் இருந்து சமூக சேவை உத்தியோகத்தர் நியமனம் மற்மும் சக நியமனங்களின் போது துறை சார்ந்த பட்டப்படிப்புகளில் புறக்கணிக்கப்பட்டே வருகிறது.

இதற்காக கிழக்கில் தற்போது சமூக சேவை உத்தியோகத்தர்களுக்கான 15 ற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் நிலவுவதை அறியமுடிகிறது.

இதற்கான விண்ணப்பத்தை விரைவில் கோருவதுடன் சமூகப் பணி டிப்ளோமாதாரிகளுக்கு முன்னுரிமையளிக்க வேண்டும் .

ஆசிரியர் சேவை தொடர்பில் பட்டமுடித்தவர்களுக்கும் விவசாய சேவை தொடர்பில் டிப்ளோமாதாரிகளுக்கும் உரிய துறையில் நியமனங்கள் வழங்கப்படுவது போன்று, சமூகப்பணி டிப்ளோமாதாரிகளான எங்களுக்கு சமூக சேவை உத்தியோகத்தர்கள் நியமனம் வழங்கப்படுவதில்லை இது எமக்கு கவலையை ஏற்படுத்துகிறது .

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய சிறந்த முற்போக்கு சிந்தனையுள்ளவர், துணிச்சலான கொள்கைகளை பிரகடனப்படுத்தி வருகிறார். இதனை பாராட்டுகிறோம்.

இந்த மனுவை கிழக்கு ஆளுனர், ஜனாதிபதி போன்றவர்களுக்கு அனுப்பியுள்ளோம்.

இதனை கருத்திற்கொண்டு புதிய சுற்று நிரூபத்துக்கு ஏற்றவாறு எமக்கான உரிய துறையில் உரிய நியமனங்களை முக்கியத்துவம் அளித்து வழங்க வேண்டும் என இச் சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார்.