தமிழ் மக்கள் இனியும் ஏமாறக்கூடாது!

Report Print Kumar in சமூகம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் 72வருட காலத்தில் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்காத எந்த உரிமையினையும் 72 வருடங்களுக்கு பின் இனிவரும் காலத்தில் பெற்றுக்கொடுப்பார்கள் என்றும், தமிழ் மக்கள் இனியும் ஏமாறக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை)தெரிவித்தார்.

இன்று மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த வெள்ளிமலை,

கிழக்கில் அனைத்து தமிழர்களும் ஒன்றாக நின்று உரிமையினையும் வென்றெடுக்க வேண்டும். அபிவிருத்தியையும் பெறவேண்டும். அதற்காக சோரம்போன ஒரு இனமாக மாறாது பேரம்பேசி உரிமையினையும், அபிவிருத்தியையும் பெறக்கூடிய வகையில் எதிர்காலத்தில் நாங்கள் செயற்பட வேண்டும்.

கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலையில் தமிழர்கள் ஏனைய இனத்துடன் போட்டியிட்டு முன்னுக்கு வரவேண்டும். இனத்தினை பாதுகாக்கவேண்டும், உரிமையினை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடன் பல கட்சிக்காரர்கள் இருந்தார்கள், இருக்கின்றார்கள்.

அதற்காக கிழக்கில் செயற்படும் அனைவரையும் அழைத்துபேசுவதற்கு முயற்சித்தேன். சிலர் வந்தார்கள். பலர் வரவில்லை. கிழக்கின் ஒற்றுமை தொடர்பில் பேசுகின்றவர்கள் உதட்டளவில் ஒற்றுமை பேசக்கூடாது, உள்ளத்தினால் பேச வேண்டும்.

உதட்டளவில் பேசிபேசி தமிழ் மக்களை உசுப்பேற்றி வாக்குகளைப்பெற்ற காலம் மலையேறிவிட்டது. எதிர்காலத்தில் தமிழ் மக்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசுகின்ற அரசியல்வாதிகளை நம்பி ஏமாந்ததுபோதும்.

எதிர்காலத்தில் நாங்கள் விழிப்படைந்த ஒரு இனமாகவும், கிழக்கினை மறுமலர்ச்சியடைந்த ஒரு தாயகமாக மாற்றவேண்டும் என்ற நற்சிந்தனையில் வாழ்கின்றார்கள்.

ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக நாங்கள் போட்டியிடுவோம் என்ற எண்ணத்தில் பலர் ஒற்றுமைபற்றி பேசிபேசி வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக போட்டியிடுவோம் என்ற எண்ணத்தில் பலர் ஒற்றுமைபற்றி பேசிபேசி தங்களை தனித்துவமாக காட்டுவதைவிட அனைவரும் ஒன்றிணைத்து பொதுச்சின்னத்தில் போட்டியிட்டு அதிகபடியான பாராளுமன்ற உறுப்பினர்களையோ> மாகாணசபை உறுப்பினர்களையோ அனுப்புவதினால் எந்தவித நன்மையும் இல்லை.

ஏனென்றால் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் 2004இல் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தெரிவுசெய்யப்பட்ட காலத்தில்தான் யுத்தம் நடந்தது சுனாமிவந்தது. வெள்ளம் வந்தது.

அந்த நேரத்தில் குறித்த 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு உயிர்அச்சுறுத்தல் என கூறி செல்வந்த நாடுகளுக்கு சென்று தஞ்சம்புகுந்ததும், இந்தியாவுக்கு சென்றிருந்ததும் கொழும்பிலே இருந்ததுமாக காலங்கழித்தபின் மீண்டும் தேர்தல் வந்ததும் கிழக்கிற்கு வந்தார்கள். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்தார்கள்.

இந்திய அரசாங்கம்தான் யுத்தத்தை வழிநடத்துகின்றது என்ற ஒரு எண்ணம் தமிழ் மக்கள் எல்லோரிடத்திலும் இருந்தது. அப்படியாயின் 22 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்திய பாராளுமன்றத்திற்கு முன்னால் உண்ணாவிரதம் இருந்திருக்கலாம், அல்லது போராட்டம் செய்திருக்கலாம்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட 22 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக இலங்கை பாராளுமன்றத்திலோ அல்லது பாராளுமன்றத்திற்கு முன்பாகவோ ஆர்ப்பாட்டம் செய்திருக்க முடியும்.

அது முடியாதென்றால் வன்னியிலே 2009ம் ஆண்டிற்கு முன் பல இலட்சக்கணக்கான மக்கள் கொத்துக்கொத்தாக கொன்று குவிக்கப்பட்டபோது அங்கு சென்று மக்களோடு மக்களாக இருக்கின்றோம். எங்களையும் கொல்லுங்கள் என்று மக்களோடு இருந்திருக்க முடியும்.

உதட்டிலே வீரம் பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களையோ, மாகாணசபை உறுப்பினர்களையோ மக்கள் தெரிவு செய்யாமல் உங்களது உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் அளிக்கக்கூடியவர்களை, எந்த அரசாங்கம் வந்தாலும் அந்த அரசாங்கத்திடம் சென்று பேரம் பேசி போட்டியிட்டு உரிமை தொடக்கம் அபிவிருத்திவரை பெற்றுத் தருகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களை, மாகாணசபை உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டும்.

தலைவர் பிரபாகரன் அவர்களால் பெற்றுத்தர முடியாத ஈழத்தையோ எந்த உரிமையையோ வேறு எவராலும் பெற்றுத்தர முடியாது என்பதற்கு உதாரணமாக சம்பந்தன் ஐயா அவர்கள் நத்தாருக்கு பெற்றுத் தருகின்றேன், தீபாவளிக்கு பெற்றுத் தருகின்றேன்.

சித்திரைக்கு பெற்றுத் தருகின்றேன். 2016ல் பெற்றுத் தருகின்றேன்,2017ல் பெற்றுத் தருகின்றேன், 2019ல் பெற்றுத் தருகின்றேன் என்று காலத்தை கழித்து நான்கரை வருடங்களுக்கும் மேல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுத்தர முடியாத ஒரு தலைமைத்துவமாகவும் இருந்ததையிட்டு நான் வெட்கித் தலை குனிகின்றேன்.

தமிழீழம் கேட்டோம், தனிநாடு கேட்டோம், சமஷ்டி கேட்டோம், ஒன்றுபட்ட நாட்டிற்குள் சுயாட்சி கேட்டோம். கேவலம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் கேட்டோம்.

அங்கிருக்கின்ற மதகுருமாரும் மக்களும் உண்ணாவிரதம் இருந்தார்கள். அங்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் அவர்கள் எங்களுடைய பிரதமர் அவர்கள் அனுமதி பெற்றுத் தந்திருக்கின்றார்.

ஒருமாத காலத்திற்குள் உங்களது பிரச்சினையை தீர்த்துவைப்போம் என்று கூறி அவர்களை உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பணித்து கிட்டத்தட்ட 9 மாதங்கள் கழிந்து ஆட்சி மாற்றமும் ஏற்பட்டு அடுத்த அரசாங்கமும் வந்துவிட்டது.

தமிழ் மக்களே ஏமாந்தது போதும் இனியும் ஏமாறாதீர்கள். மாற்றினமே வாழு வாழு, தமிழினமே தாழு தாழு என்றிருக்கின்ற எந்த அரசியல்வாதிகளையும் நம்பாதீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.