வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தாயொருவரை காணவில்லை! உதவிகோரும் கணவர்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - இராசேந்திரகுளம் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாயொருவரை காணவில்லை என தெரிவித்து பெண்ணின் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார்.

இராசேந்திரகுளம் பகுதியினைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான 32 வயதுடைய சந்திரகுமார் சரோஜினி என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பெண் வீட்டிலிருந்து (மல்லாவி) காலை 5.30 மணியளவில் வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு பேருந்தில் சென்றுள்ள நிலையிலேயே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் காணாமல் போன தினத்தில் நீல நிற ஆடை அணிந்து சென்றுள்ளதுடன், அவரின் தொலைபேசியும் செயலிழந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக குறித்த ஆடைத்தொழிற்சாலையின் முகாமையாளரை தொடர்பு கொண்டு வினவியபோது,

எமது தொழிற்சாலைக்கு காலை 7.30 மணிக்கு எமது பேருந்தில் வருகை தந்து தொழிலினை மேற்கொண்டதுடன் மாலை 5.30 மணியளவில் தொழிலினை நிறைவு செய்து எமது பேருந்தில் வீடு திரும்பியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் நாம் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் எமது பேருந்தில் அன்றைய தினம் மாலை 7.30 மணியளவில் மல்லாவி நகரில் இறங்கியுள்ளமை தெரியவருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

தாயை பிரிந்து 9 வயதுடைய பெண் குழந்தை மற்றும் 12,13 வயதுடைய ஆண் குழந்தைகள் இருவரும் நிர்கதியாகியுள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதுடன் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளார். இதன் காரணமாக குழந்தைகள் உணவின்றி அயல் வீடுகளில் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே குறித்த பெண் தொடர்பான விபரங்களை அறிந்தோர் கீழுள்ள தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறு உதவி கோரப்பட்டுள்ளது.

கணவர் - 0766562953