மட்டக்களப்பில் மணல் களஞ்சியசாலைகள் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகை

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி - பதுளை வீதியை அண்மித்த நீர் நிலைகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பெருமளவிலான மணல் சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மூன்று களஞ்சியசாலைகள் வவுணதீவு விசேட அதிரடிப்படையினரால் இன்று முற்றுகையிடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு ஏறாவூர் சுற்றலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இங்கு 159கியூப் மணல் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்ததாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கொடுவாமடு மற்றும் கித்துள் ஆகிய பிரதேசங்களில் இந்த மணல் களஞ்சியசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.

தொல்பொருள் ஆய்வு நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுணதீவு விசேட அதிரடிப்படையினர் இந்த பாரிய முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இக்களஞ்சியசாலைகளிலிருந்து கைப்பற்றப்பட்ட மணல் மற்றும் சந்தேகநபரும் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முந்தணி ஆறு மற்றும் மாதுருஓயா ஆகிய நீர்நிலைகளில் இம்மணல் தோண்டப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இவ்வர்த்தகர்களிடம் களஞ்சியப்படுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் இருக்கவில்லையென அதிரடிப்படையினர் குறிப்பிட்டனர்.