திருமலையில் இம்முறையும் சம்பந்தன் போட்டியிடுவார்!

Report Print Rakesh in சமூகம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவார். இன்றுவரை அந்த முடிவில் மாற்றமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரா.சம்பந்தன் போட்டியிடுவாரா அல்லது தேசியப்பட்டியல் ஊடாக பிரதிநிதித்துவம் செய்யப்படுவாரா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய சுமந்திரன், "இன்றைய நிலை வரைக்கும் அவர் தேர்தலில் போட்டியிடுகின்ற சூழலே காணப்படுகின்றது" என்றும் தெரிவித்தார்.

அத்துடன், இந்தத் தேர்தலில் பெண்கள், புது முகங்களுக்கு அதிகம் முன்னுரிமை வழங்கப்படுமா என அவரிடம் வினவியபோது,

இம்முறை தேர்தலில் படித்த இளம் முகங்களுக்கான சந்தர்ப்பங்களை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது, எனினும் தீர்மானம் முழுமையாக எடுக்கப்படவில்லை" என்றும் சுமந்திரன் பதிலளித்தார்.

பெண் உறுப்பினர்களை மாவட்டத்துக்கு ஒருவரையாவது வெற்றிபெற வைக்க வேண்டும் என்பது கடந்த தேர்தல்களில் நாம் எடுத்த முயற்சியாகும். இம்முறையும் அவ்வாறான நிலையே காணப்படுகின்றது எனவும் அவர் மேலும் கூறினார்.