மன்னார் - எருக்கலம்பிட்டி கடைத்தொகுதியில் திடீர் தீவிபத்து

Report Print Ashik in சமூகம்

மன்னார் - எருக்கலம்பிட்டி சந்தியில் உள்ள கடைத் தொகுதியில் திடீரென தீவிபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

எருக்கலம்பிட்டி சந்தி, 5ஆம் கட்டை பகுதியில் உள்ள 5 கடைகளை கொண்ட தொகுதியிலே இன்று அதிகாலை குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் கடைத்தொகுதியில் உள்ள உணவகம் மற்றும் மின் உபகரணம் திருத்தும் நிலையம் ஆகிய இரு கடைகளே எரிந்து நாசமாகியுள்ளன.

அத்துடன் எருக்கலம்பிட்டி சந்தியில் இருந்து தலைமன்னார் வரையான தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடைத்தொகுதியில் அதிகாலையில் திடீரென தீப்பற்றி எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கடை உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தியதோடு,பேசாலை பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பொது மக்களின் உதவியுடன் தீயை அணைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை பேசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.