விரைவில் கிளிநொச்சி மாவட்டத்தில் நவீன கற்றல் முறைகள் மேற்கொள்ளப்படும்: சிறீதரன் எம்.பி

Report Print Yathu in சமூகம்

எதிர்காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் நவீன கற்றல் முறைகளை மேற்கொள்ள முயற்சிகளை முன்னெடுப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் 10 இலட்சம் ரூபா பெறுமதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு முற்றம் மற்றும் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட திறன் விருத்தி வகுப்பறை என்பன கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இதற்கான நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

சர்வதேச நாடுகள் போன்று இன்று எமது மாவட்டத்திலும் திறன்விருத்தி வகுப்பறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச நாடுகளை போன்றதொரு கற்றல் முறை எமது மாணவர்கள் மத்தியிலும் கொண்டுவரப்படுகின்றமை மாணவர்களிற்கு வரப்பிரசாதமாக அமைகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 170ற்கும் மேற்பட்ட திறன்விருத்தி வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட்டக்கச்சி பிரதேசம் திறன்விருத்தி வகுப்பறை வலயமாக உருவெடுத்து வருகின்றது. அங்குள்ள பாடசாலைகளில் இவ்வாறான வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் திறன் வகுப்பறைகள் அதிகரிக்கப்பட்டு மாணவர்கள் நவீன கற்றல் முறைகளை மேற்கொள்ள முடியும். அதற்காக என்னால் முடிந்தவற்றையும் செய்வேன் என தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேசசபை தவிசாளர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.