ஆசிரியர்களை நியமிக்க கோரி வவுனியாவில் பெற்றோர் பாடசாலை வாயிற்கதவை மூடி ஆர்ப்பாட்டம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா, வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த பாடசாலையில் கணக்கீடு, வர்த்தகம், இந்துநாகரீகம், கணிதம், தமிழ் மற்றும் கலை பாடங்களான சித்திரம், சங்கீதம் இரண்டாம் மொழி பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை 342 மாணவர்கள் கல்விகற்கும் இப் பாடசாலையில் 20 ஆசிரியர்களும் பகுதி நேரமாக 2 ஆசிரியர்களுமே கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஆரம்ப பிரிவில் 105 மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் நிலையில் 3 ஆசிரியர்களே கல்வி கற்பித்து கொண்டிருக்கின்றனர். இப்பாடசாலையில் ஆரம்ப பிரிவு மற்றும் உயர்தர மாணவர்களுக்கு போதுமான ஆசிரியர்கள் இன்றி இப்பாடசாலை இயங்கி வருகின்றது.

இந்நிலையில், இன்று மாணவர்களும், பெற்றோர்களும் பாடசாலை வாயிலைமூடி பாடசாலையின் முன்னால் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கிராமத்திற்கு ஒரு நீதி நகரத்திற்கு ஒரு நீதியா?, எமது பாடசாலை எமக்கு வேண்டும் ஆசிரியர்களை உடன் நியமி, கிராமத்தின் கல்வி வளம் கல்வியே, சமமான கல்வியை வழங்கு, ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய், கிராமப்புற பாடசாலைகளுக்கும் உங்கள் கண்களை திருப்புங்கள், மாணவர்களின் கல்வியை நாசமாக்காதீர் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.

இதன்போது, செட்டிகுளம் கோட்டகல்விப்பணிப்பாளருக்கு பாடசாலையின் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பாக எடுத்துக்கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே தாம் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் பிரதேச செயலாளர் சி.சிவகரன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் ஆர்ப்பாட்டக்காரர்களால் கூறப்பட்ட விடயம் தொடர்பாக கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஒரு வாரத்தில் தீர்வை பெற்றுத்தருவதாக தெரிவித்தார்.

இதேவேளை செட்டிகுளம் கோட்ட கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.பரீட் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலந்துரையாடியிருந்தார் .

இதன்போது இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோது அவர்கள் தெரிவித்ததாவது,

நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை 14நாட்களுக்குள் கடமையில் அமர்த்துவதாகவும் அவர்கள் கடமைக்கு சமூகம் தராத சந்தர்ப்பத்தில் உடனடியாக வேறு ஆசிரியர்களை நியமிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதன் போது குறித்த ஆர்ப்பாட்டம் தேவையற்றது என கூறியபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் கோட்டக்கல்வி பணிப்பாளருடம் முரண்பட்டிருந்தனர்.

ஒருவார காலத்தில் ஆசிரியரை நியமித்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சீராக கொண்டுசெல்ல கல்வி திணைக்களம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தாம் தமது போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.

பின்னர் பாடசாலையின் வளாகத்தில் கோட்டக்கல்வி பணிப்பாளரை பாடசாலைக்குள் நுழையவிடாது பெற்றோர் வாயில்கதவை மூடியிருந்தனர். கோட்டக்கல்வி அதிகாரியை சரமாரியாக கேள்விக்கணைகளை பெற்றோர்கள் தொடுத்ததையடுத்து பதில் கூறமுடியாதவாறு கோட்டக்கல்வியதிகாரி அவ்விடத்திலிருந்து நழுவி சென்றிருந்தார்.

மாணவர்களும்,பெற்றோர்களும் மேற்கொண்ட இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பின்னர் பிள்ளைகளை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றிருந்தனர்.

இதனால் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் யாவும் இன்று ஸ்தம்பிதம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.