ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியரை நியமிக்க கோரி பெற்றோர் ஆர்ப்பாட்டம்

Report Print Kumar in சமூகம்

ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் தகுதியான ஆசிரியரை நியமிக்ககோரி பெற்றோர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு – ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய பாடசாலையில் தரம் 05 மாணவர்களுக்கு கற்பிக்க தகுதியான ஆசிரியர் ஒருவரை நியமிக்ககோரி பெற்றோர் குறித்த ஆர்ப்பாட்டத்தை இன்று காலை பாடசாலை வளாகத்தின் முன்னால் முன்னெடுத்திருந்தனர்.

மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், வலயக்கல்விப் பணிப்பாளர் தமது ஆர்பாட்ட இடத்திற்கு வருகை தந்து தமக்கான தீர்வை கூறவேண்டும் என தெரிவித்தும் பெற்றோர் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது, "எங்கள் பாடசாலையை பழிவாங்காதீர்கள், வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும், எமது மாணவச் செல்வங்களை பறக்கணிக்காதே! தரம்05 மாணவர்களுக்கு ஆசிரியர் தேவை", என எழுதப்பட்ட பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

ஆர்ப்பாட்ட இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் வருகை தந்து ஆர்பாட்டடக்ககாரர்களுடன் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இதன் போது ஆர்பாட்டக்காரர்களினால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் இப்பாடசாலையின் தரம் 05 மாணவர்களுக்கான தகுதிவாய்ந்த ஆசிரியர் நியமிக்ப்படுவார் என வலயக்கல்வி அலுகலக அதிகாரிகளினால் வாக்குறுதியளிக்கப்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.