விடுதலைப்புலிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை திரும்பப்பெற்ற சம்பவம்! மலேசிய சட்டமா அதிபருக்கு எதிராக போர்க்கொடி

Report Print Ajith Ajith in சமூகம்

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் குற்றங்களை திரும்பப்பெற்றமை காரணமாக மலேசியாவின் சட்டமா அதிபரை பதவி விலகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் இரண்டு மாகாணங்களின் ஆட்சியை தக்கவைத்துள்ள இஸ்லாமிஸ்ட் எதிர்க்கட்சியான பீ.ஏ.எஸ் கட்சி இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது.

அரசாங்கம் சட்டமா அதிபர் தோமஸை பதவியில் விலக்காது போனால் பாரிய போராட்டங்களை நடத்தப்போவதாக அந்தக்கட்சி அச்சுறுத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை வைத்திருந்தது உட்பட்ட சில குற்றச்சாட்டுக்களுக்காக அரசியல்வாதி ஒருவர் உட்பட்ட பலர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலேசிய காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

எனினும் மலேசியாவின் சட்டப்படி அவர்களை தடுத்து வைத்திருப்பதில் எவ்வித நியாயமுமில்லை என்றுக்கூறி சட்டமா அதிபர் கைதுசெய்யப்பட்ட 12பேர் மீதான குற்றச்சாட்டுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டார்.

எனினும் மலேசிய வரலாற்றில் முதல்தடவையாக சட்டமா அதிபர் தனிப்பட்டவர்கள் விடயத்தில் சார்பான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது. சட்டமா அதிபரின் தீர்மானத்தால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக அந்தக்கட்சி தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சட்டமாஅதிபரின் செயற்பாட்டை அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் முஹீதின் யாசீன் கண்டித்திருந்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளை தொடர்ந்தும் பயங்கரவாதப் பட்டியலில் வைத்திருப்பதற்கு அரசாங்கத்திடம் போதுமான சாட்சியங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்