நீதிமன்றில் ஆஜராகுமாறு நான்காவது தடவையாக வசந்த கரணாகொடவிற்கு நீதிமன்றம் உத்தரவு

Report Print Ajith Ajith in சமூகம்

நான்காவது தடவையாகவும் கொழும்பு மேல்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு இன்று கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரணாகொடவிற்கு எதிராக ஆணை பிறப்பித்துள்ளது.

2008-2009 ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பிலேயே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஏற்கனவே தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக அவர் நீதிமன்றில் முன்னிலையாகதபோது கடற்படை தளபதி மற்றும் காவல்துறை மா அதிபரின் ஊடாக பிரசன்ன ஆணையை கைளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில் இன்று பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இந்த பிரசன்ன ஆணையை கையளிக்குமாறும் அவர் மார்ச் 20ம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் பிரசன்னமாக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

வசந்த கரணாகொட உட்பட்ட 13 பேருக்கு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு எதிராக 667 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. வழக்கில் கரணாகொட நான்காவது பிரதிவாதியாவார்.

இந்தநிலையில் கரணாகொட அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அண்மையில் முன்னிலையாகி சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.