சர்வதேச ரீதியில் தாய் நாட்டிற்கு பதக்கங்களை வென்று கொடுத்த வவுனியா வீரர்களுக்கு கௌரவிப்பு!

Report Print Thileepan Thileepan in சமூகம்

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கைக்காக விளையாடி பதக்கங்களை வென்ற வடக்கு மாகாண வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வவுனியாவில் நடைபெற்றது.

அண்மையில் பாக்கிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு விளையாடி பதக்கங்களை பெற்று இலங்கை சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

இதற்கு உறுதுணையாக செயற்பட்ட வடக்கு மாகாண வீரர்கள் ஏழு பேரையும் கௌரவிக்கும் நிகழ்வு விழா ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் செல்லத்துரை சபாநாதன் தலைமையில் வாடிவீடு மண்டபத்தில் நடைபெற்றது.

வெற்றி வீரர்கள் வவுனியா கந்தசாமி ஆலய முற்றலில் இருந்து மாலை அணிவித்து பாண்ட் வாத்திய இசையுடன் பிரதான வீதியூடாக வாடி வீட்டு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டிருந்தனர்.

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்களை பெற்ற ஆர்.கெ.கெவின் (11), எஸ்.சஞ்சயன் (18), ரி.நாகராஜா (18), வி.ராகுல் (17), எஸ்.சிறிதர்சன்(18), கெ.நிரோஜன் (16) மற்றும் வி.வசிகரன் (17) ஆகிய வீரர்களுக்கும் இவ்வீரர்களின் பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமார் ஆகியோருக்கு அதிதிகளால் பொன்னாடை போர்த்தி, கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

வவுனியா வர்த்தக சங்கம், வவுனியா வர்த்தக நலன் புரிச்சங்கம், வவுனியா மாவட்ட தனியார் பேருந்த உரிமையாளர் சங்கம், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், ஆகியவற்றின் பங்களிப்புடன் கௌரவிப்பு நிகழ்வானது இடம்பெற்றது.

நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், தமிழ் மணி அகளங்கன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், வர்த்தக நலன்புரி சங்கத்தின் தலைவர் எஸ்.புலேந்திரன், நகரசபை உறுப்பினர் ரி.ராஜலிங்கம், நகரசபை உறுப்பினர் பி.யானுஜன், தமிழ் மணி மேழிக்குமரன், மாவீரன் பண்டாரவன்னியன் நற்பணி மன்றத்தின் தலைவர் மா.கதிர்காமராஜா, மற்றும் வீரர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.