வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற கணவன் மரணம்! மனைவி வெளியிட்டுள்ள சந்தேகம்

Report Print Theesan in சமூகம்

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாகவும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 8ம் திகதி நெளுக்குளம் பகுதியிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகம் அழகேஸ்வரன் வயது 43 மீது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இவ்விபத்தில் வலது காலில் முறிவு ஏற்பட்ட குடும்பஸ்தர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக அவரின் உடல் தகுதிகள் எவ்விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளாமல் தவறான முறையில் மயக்க மருந்து ஏற்பட்டதன் பின்னர் சற்று நேரத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வைத்தியர்கள் மயக்கமருந்தை கட்டுப்படுத்தும் இன்னொரு மருந்தையும் என் கணவர் மீது ஏற்றியபோது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு கடந்த பத்து நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவரது உறவினர்கள் வைத்தியர்களுடன் தொடர்பு கொண்டு இவ்வாறு அவரது உடல் தகுதி நிலைகள் பரிசோதனை மேற்கொள்ளாமல் மயக்க மருந்து ஏற்றப்பட்டதன் விளைவாகவே அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை தீவிர சிக்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது கணவரின் உயிரிழப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதுடன் வைத்தியர்களின் கவனயீனமே காரணம் என்று மரண விசாரணை அதிகாரியிடம் உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்தார்.

குறித்த குடும்பஸ்தர் நெளுக்குளம் பகுதியிலுள்ள கிறிஸ்தவ சபை ஒன்றில் மதபோதகராகவும் கடமையாற்றி வந்திருந்தார் என்பதுடன், ஆலயத்திற்குச் செல்ல முற்பட்டபோது வீட்டிற்கு அருகில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்விடயம் குறித்து வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் கே.நந்தகுமாரை தொடர்பு வினவியபோது,

குறித்த மதபோதகரின் உயிரிழப்பு தொடர்பாக எதுவிதமான முறைப்பாடுகளும் எனக்கு வழங்கப்படவில்லை. முறைப்பாடு வழங்கப்பட்டால் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளமுடியும் என தெரிவித்திருந்தார்.