அரசை நம்பினோம் - ஏமாற்றமே மிச்சம்! மயிலிட்டி மக்கள் ஆதங்கம்

Report Print Rakesh in சமூகம்

“எமது காணிகளை விடுவிப்பார்கள் என்று காலம் காலமாக வந்த அரசை நம்பினோம். எமது தமிழ் மக்கள் பிரதிநிதிகளை நம்பினோம். எந்தப் பயனும் இல்லை.

எந்தவிதமான மாற்று வழிகளும் எமக்குக் கிடைக்கவில்லை. இறுதியில் எமக்கு ஏமாற்றமே கிடைத்தது." இவ்வாறு யாழ். வலிகாமம் வடக்கு மயிலிட்டி மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறியதாவது,

"காணிகளை விடுவிக்குமாறு கடந்த அரசிடம் பல வேண்டுகோளை விடுத்திருந்தோம். ஆனால், அவர்கள் காணிகளை விடுவிக்கவில்லை.

எங்களுடைய மக்கள் பலர் தற்போதும் நலன்புரி நிலையங்களில் வசித்து வருகின்றனர். எங்களுடைய இடங்கள் விடுவிக்கப்படும் என்று தற்போதைய புதிய அரசை முழுமையாக நம்புகின்றோம்.

அந்த இடங்கள் விடுவிக்கப்பட்டால்தான் எங்களுடைய 30 வருடங்களான கனவு மற்றும் மன ஏக்கங்கள் மாறி ஒரு நிறைவான வாழ்க்கையுடன் வாழ முடியும்.

கடந்த அரசில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களையும் மக்கள் முழுமையாக நம்பினர். ஆனால், எங்களுக்கு எந்தவிதமான மாற்று வழிகளும் கிடைக்கவில்லை.

நீதிவான் முகாம், கோப்பாப்பிலவு முகாம், சபாவதி கண்ணகை உள்ளிட்ட முகாங்களில் மக்கள் தற்போதும் வாழ்ந்து வருகின்றனர். சராசரியாக 200 குடும்பங்கள் நலம்புரி முகாம்களில் வாழ்ந்து வருகின்றன" - என்றனர்.