கூட்டத்துக்கு அழைப்பில்லை! தவிசாளர்கள் குற்றச்சாட்டு

Report Print Rakesh in சமூகம்

வலிகாமம் மேற்கு, வலிகாமம் தென்மேற்கு, காரைநகர் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த அபிவிருத்திக் கூட்டத்துக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அந்தப் பகுதிக்குள் உள்ளடங்கும் மூன்று பிரதேச சபைகளின் தவிசாளர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

நேற்று நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தமக்கோ, உறுப்பினர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படாமல், பிரதேச சபை செயலாளர்களுக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, "இந்தக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இ.அங்கஜன் தலைமையில் நடைபெற்றது. இது பிரதேச அபிவிருத்திக் கூட்டமே தவிர ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இல்லை.

பிரதேசத்தின் அடிப்படைத் தேவைகள் குறித்து ஆராய்வதற்காக பிரதேச சமூக மட்ட அமைப்புகளுக்கும், பிரதேச சபை செயலாளர்களுக்குமே இதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்வதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படாது. அவர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கலாம்" என்று வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.