ஆசிரியர்களின் போராட்டத்தால் முடங்கியுள்ள கிழக்கு மாகாண பாடசாலைகள்

Report Print Kumar in சமூகம்

நாடளாவிய ரீதியில் இடைக்கால கொடுப்பனவை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி சுகவீன விடுமுறையின் கீழ், இன்று ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொண்டுவரும் சுகவீன விடுமுறை போராட்டம் காரணமாக மாணவர்களும் பெற்றோரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இப்போராட்டத்தின் காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் வருகை குறைவாக காணப்பட்டதுடன், கல்வி நடவடிக்கைகளும் முற்றாக முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை முதல் பாடசாலைக்கு பிள்ளைகளை அழைத்துவந்த பெற்றோரும் இதனால் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், மீண்டும் பிள்ளைகளை திருப்பி அழைத்துச் சென்றுள்ளனர்.

எனினும் சில பாடசாலைகள் திறக்கப்பட்டிருந்த போதிலும் ஆசிரியர்களின் வரவின்மையினால் பாடசாலைகள் வெறிச்சோடிக்காணப்பட்டதாகவும், வீதிகளில் மாணவர்கள் அலைந்து திரிந்ததையும் காணமுடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அம்பாறை

அம்பாறை மாவட்டம் கல்முனை வலயக்கல்வி பிரிவிற்குட்பட்ட பாடசாலையில் வழமை போன்று பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் பாடசாலையில் ஆசிரியர்கள் வருகை தாராமை காரணமாக மீண்டும் வீடுகளுக்கு திரும்பிச்சென்றுள்ளனர்.


செய்தி - வருணன்

திருகோணமலை

ஆசிரியர்களின் சுகயீனம் லீவு காரணமாக இன்று கிண்ணியா வலய பாடசாலைகளில் கற்றல் செயற்பாடு பாதிக்கப்பட்டு, மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.

அதிகமான மாணவர்களை பாடசாலைக்கு சமூகமாகளித்திருந்த ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் பாடசாலை வகுப்பறைகள் மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.

செய்தி - அப்துல் சலாம் யாசீம்