ஒரு இலட்சம் வேலை வாய்ப்பிற்கான நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்! சமூக ஆர்வலகர்கள் விசனம்

Report Print Theesan in சமூகம்

புதிய அரசினால் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள் அனைத்து பிரதேச செயலகங்களிலும் இன்று காலை முதல் ஆரம்பமாகியுள்ளன.

இதில் வவுனியா மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் இவ்வேலை வாய்ப்புக்களுக்கு விண்ணப்பத்திருந்தனர். இவர்களுக்கான நேர்முக தேர்வுகள் இன்றிலிருந்து எதிர்வரும் சனிக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் குறித்த நேர்முக தேர்வில் விண்ணப்பதாரிகளை நேர்முகம் காண்பதற்காக ஒரு அரச உத்தியோகத்தரும், இரண்டு இராணுவ வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 890 பேர் விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் ஐந்து கிராம சேவகர் பிரிவிற்கான நேர்முக தேர்வுகள் உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் இடம்பெறுகின்றது.

இவ்வாறு அரச உத்தியோகத்தர்களுடன், இராணுவத்தினரை நேர்முகம் காண்பதற்கு இணைந்துக்கொண்டமைக்கு சமூக ஆர்வலகர்கள் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலதிக தகவல் மற்றும் காணொளி - திலீபன்

மன்னார்

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார் நகர்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலகங்களிலும் காலை முதல் இடம் பெற்று வருகின்றது.

குறித்த நேர்முகத்தேர்வின் போது ஒரு அரச அதிகாரியும் 2 இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

அம்பாறை

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நேர்முக தேர்வு நாவிதன்வெளி, கல்முனை பிரதேச செயலகங்களில் ஆரம்பமாகியுள்ளது.

இன்று மாத்திரம் ஏறத்தாழ 300 க்கும் அதிகமான விண்ணப்பத்தாரிகள் நேர்முக தேர்வில் பங்கேற்கவுள்ளதாக பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது பிரதேச செயலகத்திற்கு இராணுவத்தினர் வருகை தந்துள்ளதுடன், நேர்முக தேர்விலும் பங்கேற்றிருந்தனர்.