வவுனியாவில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி தொடரும் போராட்டம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி இரண்டாவது தடவையாகவும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயத்தில் கணக்கீடு, வர்த்தகம், இந்துநாகரீகம், கணிதம், தமிழ் மற்றும் கலை பாடங்களான சித்திரம், சங்கீதம் இரண்டாம் மொழி பாடங்களுக்காக நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி பெற்றோர்களும், மாணவர்களும் இன்று காலை இரண்டாவது தடவையாகவும் பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

342 மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலையில் 20 ஆசிரியர்களும் பகுதி நேரமாக இரண்டு ஆசிரியர்களுமே கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக ஆரம்ப பிரிவில் 105 மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் நிலையில் 3 ஆசிரியர்களே கல்வி கற்பித்து கொண்டிருக்கின்றனர். இப்பாடசாலையில் ஆரம்ப பிரிவு மற்றும் உயர்தர மாணவர்களுக்கு போதுமான ஆசிரியர்கள் இன்றியே இயங்கி வருகின்றது.

இவ் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யகோரியே செட்டிகுளம், நேரியகுளம் வீதியில் மாணவர்களும், பெற்றோர்களும், பழைய மாணவர்களும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கிராமத்திற்கு ஒரு நீதி நகரத்திற்கு ஒரு நீதியா?, எமது பாடசாலை எமக்கு வேண்டும் ஆசிரியர்களை உடன் நியமி, கிராமத்தின் கல்வி வளம் கல்வியே, சமமான கல்வியை வழங்கு, ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய், கிராமப்புற பாடசாலைகளுக்கும் உங்கள் கண்களை திருப்புங்கள், மாணவர்களின் கல்வியை நாசமாக்காதீர் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.

இதன்போது, செட்டிகுளம் கோட்டகல்விப் பணிப்பாளருக்கு பாடசாலையின் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பாக எடுத்துக்கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே தாம் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் கோட்டக்கல்வி அதிகாரி, செட்டிகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் எதிர்வரும் வெள்ளிக் கிழமைக்குள் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதாக வழங்கிய வாக்குறுதியையடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த திங்கள் கிழமையும் பாடசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.