மஹிந்தவின் நெருங்கிய உறவினருக்கு கோட்டாபய ஆட்சியில் ஏற்பட்ட நெருக்கடி

Report Print Steephen Steephen in சமூகம்

மிக் விமானங்களை கொள்வனவு சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

மிக் 27 ரக விமான கொள்வனவின் போது நடந்த 7 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உதயங்க வீரதுங்க, சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை தொடர்ந்தும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

உதயங்க வீரதுங்க துபாய் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்நாடு அண்மையில் அவரை இலங்கைக்கு நாடு கடத்தியது, நாடு கடத்தப்பட்ட அவரை குற்றவியல் விசாரணை திணைக்களம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தது. உதயங்க வீரதுங்க, பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தாயாரது தங்கையின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு மிக் 27 ரக விமானங்கள் உக்ரைனிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டது. அன்றைய ரஷ்ய தூதுவராக பணியாற்றிய உதயங்க வீரதுங்கவின் ஊடாகவே இந்த விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.

விமானங்களின் விலைகளை விட இரண்டு மடங்கு பணம் செலுத்தப்பட்டு விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நான்கு விமானங்களின் விலை 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற போதிலும் 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளது. 7 மில்லியன் டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.