யாழ். மருதனார்மடத்தில் நாற்பத்தொரு இளைஞர்கள் கைது! நடந்தது என்ன?

Report Print Murali Murali in சமூகம்

அண்மையில் யாழ். மருதனார்மடம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவர்கள் ஆவா குழு உறுப்பினர்கள் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ். மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஆவா குழு உறுப்பினர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக கூடியிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த விடுதியை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்தனர்.

இதன்போது அந்த விடுதியில் இருந்து 40க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த விடயம் தொடர்பில் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினரும், குறித்த விடுதியின் நிர்வாக இயக்குனரும் யாழ். ஊடக அமையத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

கடந்த 23ம் திகதி 50 பேருக்கான உணவு முன்பதிவு செய்யப்பட்டது. அதற்கமைய மருதனார்மடத்தில் உள்ள எமது உணவகத்தில் முற்பதிவு செய்யப்பட்ட உணவை எடுப்பதற்காக வந்திருந்த சமயம் இராணுவத்தினர் சுற்றிவளைத்து பெருமளவு இளைஞர்களை கைது செய்திருக்கின்றனர்.

சம்பவத்தில் 50 உணவை வாங்குவதற்காகவே இளைஞர்கள் வந்திருந்தனர். அதற்கு மேலதிகமாக எங்கள் ஹோட்டலில் எந்த வொரு நிகழ்வும் இடம்பெறவில்லை.

அந்த நிகழ்வு பிறிதொரு இடத்தில் இடம்பெற்றிருக்கின்றது. எங்கள் ஹோட்டலில் இருந்து ஒரு சிகரட் அல்லது ஒரு மதுபான போத்தலை கூட இராணுவத்தினர் மீட்கவில்லை.

அவர்கள் உணவு பொதிகளையே சோதனை செய்தார். சம்பவத்தை எனது முகாமையாளர் கூறியதையடுத்து நான் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தேன்.

அங்கே உள்நுழைவதற்கு என்னையும் இராணுவத்தினர் விடவில்லை. பின்னர் நான் ஹோட்டலின் நிர்வாக இயக்குனர் என்பதை கூறியதனால் உள்ளே செல்ல அனுமதித்தார்.

பின்னர் நான் இராணுவத்தினருடன் பேசியபோது தாம் அனுமதியில்லாமல் உள்ளே நுழைந்தமைக்கு முதலில் மன்னிப்பு கேட்டார்கள்.

பெருமளவு இளைஞர்கள் ஒன்று கூடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தாம் ஹோட்டலை முற்றுகையிட்டதாக கூறினர். பின்னர் அவர்களே பொலிஸாரை அழைக்குமாறும் கூறினர்.

ஆனால் அதற்கு முன்னதாகவே நாம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்திருந்தோம். பின்னர் இராணுவத்தினரின் வாகனங்களிலும், தனியார் வாகனங்களிலும் இளைஞா்களை ஏற்றி சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு நாங்கள் கொண்டு சென்றிருந்தோம்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் குற்ற செயல்களுடன் தொடா்படையவா்களா? என சோதிக்கப்பட்டு ஒவ்வொருவராக விடுதலை செய்யப்பட்டனர்.

பின்னர் 2 இளைஞா்கள் தப்பிக்க முயன்றதாகவும் அவர்கள் மீது தமக்கு சந்தேகம் உள்ளதாகவும் இராணுவத்தினர் கூறியதையடுத்து அந்த இரு இளைஞா்கள் தொடர்பாகவும் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு ஆராயப்பட்டதன் பின்னர் அவர்கள் இன்று காலை விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஆகவே நிகழ்வு நடந்தது வேறு இடத்தில், உணவு எடுக்கவந்தவர்களை இராணுவம் கைது செய்த நிலையில் நாம் ஆவா குழுவுக்கு பிறந்தநாள் கொண்டாட ஹோட்டல் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஆனால் அவ்வாறான நிகழ்வு நடக்கவில்லை. மேலும் கைது செய்யப்பட்டவர்கள் குற்றச் செயல்களுடன் தொடா்புடையவர்கள் அல்ல.

எனவே இந்த சம்பவம் அரசியல் பின்புலத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவமாகவே நாங்கள் கருதவேண்டியுள்ளது” என அவர் மேலும் கூறியுள்ளார்.