கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்யுமாறு கோரிக்கை! முடிவுக்கு வந்தது உண்ணாவிரத போராட்டம்

Report Print Murali Murali in சமூகம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய கோரியும்,பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த சனிக்கிழமை காலை ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று மாலை 6.45 மணியளவில் இந்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய கோரியும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரைச் சேர்ந்த 39 வயதான இரத்தினம் ஞானசேகரம் யூலியஸ் என்பவர் கடந்த சனிக்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வந்தார்.

இந்த போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. போராட்டத்தை கைவிடுமாறு கோரி பலரும் குறித்த நபருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தனர்.

அந்த வகையில், குறித்த நபரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மன்னார் பிரஜைகள் குழுவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதன்போது, குறித்த உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு இந்த முயற்சியை வேறு வடிவத்தில் முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கினர்.

இதனையடுத்து போராட்டம் இன்று மாலை 6.45 மணியளவில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார்,பிரஜைகள் குழு பிரதி நிதிகள், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், மூர்வீதி ஜீம்மா பள்ளி மௌலவி எம்.அசீம், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், மன்னார் நகர சபை உறுப்பினர்களான எஸ்.ஆர்.குமரேஸ், ஜோசப் தர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆகாரத்தை வழங்கி உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.