யாழில் வாள்வெட்டுக் கும்பல் மூன்று இடங்களில் அட்டகாசம்!

Report Print Rakesh in சமூகம்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் கும்பல் இன்று (26) மாலை மூன்று இடங்களில் அட்டகாசம் புரிந்துவிட்டுத் தப்பிச்சென்றுள்ளது.

இந்தக் கும்பல் மாலை 6 மணியளவில் வண்ணாா்பண்ணை முருகமூா்த்தி ஆலயத்துக்கு அருகில் உள்ள வா்த்தக நிலையம் ஒன்றுக்குச் சென்று, குறித்த வர்த்தக நிலையத்தை அடித்து நொருக்கியுள்ளது.

அத்துடன், உாிமையாளரையும் தாக்க முயற்சித்துள்ளது. இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் சென்ற 5 போ் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

பின்னர், குறித்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று, கொக்குவில் மேற்கு வராகி அம்மன் கோவிலடியில் நின்ற ஓட்டோ ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

அதன்பின்னர் அந்தப் பகுதியிலுள்ள வீடொன்றின் மீதும் குறித்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

வாள்களுடன் வந்தவர்கள் முகங்களை மூடியிருந்ததுடன், இலக்கத் தகடுகளற்ற மோட்டாா் சைக்கிள்களில் வந்தே இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

சம்பவம் குறித்த விசாரணைகளைப் பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனா். குறித்த கும்பல் தாக்குதல் நடத்திய சி.சி.ரிவி. காட்சிகள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொடிகாமம் பகுதியில் நேற்றிரவு (25) வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டுக் கும்பல், வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு அங்கிருந்த பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது எனக் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொடிகாமம், மாசேரிப் பகுதியில் வாகனமொன்றில் சென்ற 10 இற்கும் மேற்பட்டோர் அடங்கிய வாள்வெட்டுக் குழுவினர், வீடொன்றுக்குள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது வீட்டு உரிமையாளர் வெளியில் வந்தபோது அவரைத் தாக்க முற்பட்டுள்ளனர். இதனையடுத்து வீட்டுக்குள் ஓடிய உரிமையாளர் வீட்டின் கதவுகளைப் பூட்டிவிட்டு அயலவர்கள், நண்பர்கள் மற்றும் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த கும்பல் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மற்றும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொருக்கிச் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அங்கு குவிந்த அயலவர்களைக் கண்ட குறித்த குழுவைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.