இறால் வளர்ப்பிற்காக 140 ஏக்கர் காணி தாரைவார்ப்பு! பருத்தித்துறை பிரதேச சபை கண்டனம்

Report Print Rakesh in சமூகம்

வடமராட்சி கிழக்கு பிரதேசம், அம்பன் கொட்டோடை கடற்கரையில் இறால் வளர்ப்பு எனும் பெயரில் தனியார் ஒருவருக்கு 140 ஏக்கர் காணி வழங்குவதை பருத்தித்துறை பிரதேச சபை வன்மையாகக் கண்டித்துள்ளது.

இவ்வாறு காணி வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு கோரி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்குக் கடிதம் அனுப்புவதாக சபையில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபை மண்டபத்தில் தவிசாளர் அ.சா.அரியகுமார் தலைமையில் நடைபெற்ற போதே இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அமர்வில், வீதிகளில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன. அவற்றைத் திருத்தியமைக்க இதுவரை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்று உறுப்பினர்கள் தவிசாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மின்சார சபை மட்டுமே திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்றும், தாம் திருத்தம் செய்ய மின்சார சபையிடம் எழுத்து மூலம் விண்ணப்பித்தபோதும் அவர்கள் அக்கறை கொள்ளவில்லை என்றும் மாவட்ட செயலாளர் தலைமையில் குழு அமைத்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

சபைக்கான கொடி இதுவரை உருவாக்கப்படவில்லை என்று கூறி சபையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

பொது அறிவித்தல் மூலமாக அனுமதி கோரி வடிவங்கள் ஆலோசனைக்கு அமைவாக ஆராய்ந்து முடிவெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மலக்கழிவுகள் நீர் நிலைகளில் கொட்டப்படுகின்றன என்று பொதுமக்கள் கூறுகின்றனர் எனவும், இனிமேல், கலி பவுசர் அங்கு வருமானால் தீ வைத்துக் கொழுத்தப்படும் என்று மக்கள் அறிவித்துள்ளனர் எனவும் சபை உறுப்பினர் தர்சன் சபையில் தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலளித்த தவிசாளர் "மலக்கழிவு அகற்றப்படுவது ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் இவ்வாறு பாதுகாப்பு அற்ற முறையிலேயே கழிவகற்றல் இடம்பெறுகின்றது" என்றும் தெரிவித்துள்ளார்.

மருதங்கேணி இறைச்சிக் கடையை இதுவரை எவரும் ஏலம் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொழில் நிலையங்களைப் பதிவு செய்வதற்குக் கட்டணம் தொடர்பில் ஆராயப்பட்டு வர்த்தமானியில் குறிப்பிட்ட பெறுமதிகளை அறவிட சபை அனுமதி வழங்கியுள்ளது.

வடமராட்சியில் சக்கோட்டை, வல்லிபுர ஆழ்வார் கோயில் வளாகம், குருக்கட்டுப் பிள்ளையார் கோவில் வளாகம் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டவை அலைக்கதிர் கோபுரம் அல்ல என்றும், அந்த நிறுவனம் சபைக்கு அறிவித்திருக்கின்றதென்றும் தவிசாளர் மேலும் தெரிவித்துள்ளார்.