பாலைப்பாணியில் சட்டவிரோத மரக்கடத்தல்காரர்கள் வனவள அதிகாரிகள் மீது தாக்குதல்!

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலைப்பாணி-வன்னி விளாங்குளம் வீதியில் சட்டவிரோத மரக்கடத்தல் காரர்களால் வனவளத்திணைக்கள அதிகாரி மீது நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாலைப்பாணி கிராமத்தில் இருந்து வாகனம் ஒன்றில் சட்டவிரோதமாக மரம் கடத்தப்படுவதாக மாங்குளம் வனவளத்திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலினை தொடர்ந்து வனவளத்திணைக்கள அதிகாரிகள் சட்டவிரோத மரக்கடத்தல் காரர்களின் வாகனத்தினை தடுக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது கடத்தல்காரர்கள் வனவளத்திணைக்கள அதிகாரிகளின் உந்துருளி மற்றும் அதிகாரிகள் மீது வாகனத்தினால் மோதித்தள்ளி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதன்போது மாந்தை கிழக்கு பகுதிக்கு பொறுப்பான வன வளத்திணைக்கள அதிகாரியான 30 வயதுடைய எம்.டி.என்.குணதிலக காயமடைந்த நிலையில் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பில் வனவளத்திணைக்களத்தினால் மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், குறித்த சந்தேகநபர்களை தேடும் நடவடிக்கையினையும், மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை,முல்லைத்தீவு - ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மண்ணகழ்வுச் செயற்பாடுகள் தொடர்பில் பார்வையிடச் சென்ற பிரதேச சபை உறுப்பினர்களுடன் அவ்விடத்திற்கு வந்த சிலர் அச்சுறுத்தல் விடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...