சஜின் வாஸ் குணவர்தன விளக்கமறியலில்

Report Print Steephen Steephen in சமூகம்

நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த போது 30 கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணத்தை முறைக்கேடாக சம்பாதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கின் சாட்சி விசாரணைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. அப்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, வழக்கின் பிரதிவாதி, சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

இதனால், சந்தேகநபர் பிணையில் இருந்தால், சாட்சியங்களை விசாரிப்பதில் அழுத்தங்கள் ஏற்படலாம் என்பதால், அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் அரச சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க, சஜின் வாஸ் குணவர்தனவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சஜின் வாஸ் குணவர்தன கடந்த காலங்களில் ராஜபக்சவினருக்கு மிக நெருக்கமாக இருந்து வந்தார். எனினும் கடந்த ஆண்டு சஜின் வாஸ், ராஜபக்சவினருக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார்.

தனது பிள்ளைகளை கொலை செய்ய போவதாக ராஜபக்ச தரப்பினர் அச்சுறுத்தி வருவதாகவும் அப்போது செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் கூறியிருந்தார்.