வெள்ளை வான் கடத்தல்! கைது செய்யப்பட்டவர்களின் குரல்பதிவு தொடர்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்ட விடயம்

Report Print Ajith Ajith in சமூகம்

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பேரின் குரல்களும் தொலைக்காட்சிகளில் இருந்து பெறப்பட்ட செம்மையாக்கப்படாத குரல்களும் ஒத்திசைவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக மன்றாடியார் நாயகம் திலீபா பீரிஸ் இந்த தகவலை நேற்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் வெளியிட்டார்.

இதற்காக அரச பகுப்பாய்வு திணைக்களம் மூலமாக இரண்டு சந்தேகநபர்களின் குரல்களையும் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டதாக பிரதி மன்றாடியார் நாயகம் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த செய்தியாளர் சந்திப்பு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஊடக செயலாளரினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக இரண்டு சந்தேகநபர்களுக்கு ஒப்பனை செய்வதற்காக 15000 ரூபா வழங்கப்பட்டதாகவும் பிரதி மன்றாடியார் நாயகம் நீதிமன்றில் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் ராஜித சேனாரத்னவின் ஊடக செயலாளரிடம் மாத்திரமே சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் சந்தேகநபர்கள் இருவரும் ஏன் இன்று மன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை என்று பிரதான நீதிவான் கேட்டபோது அவர்கள் இருவரும் கம்பஹாவில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 4.4 மில்லியன் ரூபா கொள்ளை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் தெரிவித்தனர்.