தவறான வார்த்தையால் யாழில் ஐந்து பிள்ளைகளின் தாயொருவர் தூக்கிட்டு தற்கொலை

Report Print Sujitha Sri in சமூகம்

யாழ்ப்பாணத்தில் ஐந்து பிள்ளைகளின் தாயொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம், தாவடி தெற்கில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் 34 வயதான சுவிதன் அனுசுயா என்பவரே உயிரிழந்துள்ளார்.

தவணை முறையில் செலுத்தும் வகையில் மோட்டார்சைக்கிள் வாங்கப்பட்டுள்ள போதும் தவணை பணத்தினை சரியாக செலுத்தாமையால் குறித்த தவணை கட்டண நிறுவனத்திலிருந்து பணியாளர்கள் நேற்று முன் தினம் அனுசுயாவின் வீட்டிற்கு வந்துள்ளனர்.

கணவன் வேலைக்காக கிளிநொச்சிக்கு சென்றிருந்த போது வந்த அவர்கள் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்ய வந்துள்ளதாக மனைவியான அனுசுயாவிடம் கூறியுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் அனுசுயா பணத்தினை செலுத்த இரு நாட்கள் அவகாசம் கேட்ட போது நிறுவன பணியாளர்கள் தவறான வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்தே மனமுடைந்த குறித்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.