ஓட்டமாவடி பிரதேச சபை அமர்வில் குழப்ப நிலை:வெளி நடப்புச் செய்த சபை உறுப்பினர்கள்

Report Print Navoj in சமூகம்

ஓட்டமாவடி பிரதேச சபையின் சபை அமர்வில் ஏற்பட்ட குழப்ப நிலைமை காரணமாக சபை உறுப்பினர்கள் வெளி நடப்புச் செய்துள்ளனர்.

மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேச சபையின் 23 ஆவது அமர்வு சபையின் சபா மண்டபத்தில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரி.அஸ்மி தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது.

இதன்போது உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக சில உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தமையால் சபையின் அமர்வு நிறைவு பெற்றுள்ளது.

பிராந்திய ஊடகவியலாளர் ஒருவருக்கு சபை அமர்வில் செய்தி சேகரிக்க அனுமதி வழங்குமாறு சபை உறுப்பினர் எம்.அன்வர் தெரிவித்ததன் காரணமாக அமர்வில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறித்த பிராந்திய ஊடகவியலாளர் அண்மைக்காலமாக ஓட்டமாவடி பிரதேச சபைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டமை தொடர்பில் கடந்த காலத்தில் சபை அமர்வில் செய்தி சேகரிக்க அனுமதி வழங்க முடியாது என சபையின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர்கள் குறித்த பிராந்திய ஊடகவியலாளரை கட்டாயம் செய்தி சேகரிக்க அனுமதிக்குமாறு கோரியதற்கிணங்க சபையின் தீர்மானத்தினை மீற முடியாது மீண்டும் ஒரு முறை வாக்கெடுப்பு மூலம் அனுமதியினை பெறுவதற்கு சந்தர்ப்பத்தினை வழங்குவதாக தவிசாளர் ஐ.ரி.அஸ்மி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பில் வாக்கெடுப்பு இடம்பெற்ற நிலையில் ஆதரவாக ஆறு வாக்கும், எதிராக ஏழு வாக்குகளும், நடுநிலையாக இரண்டு வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் குறித்த ஊடகவியலாளரை செய்தி சேகரிக்க அனுமதிக்க முடியாது என்று சபை ஏற்றுக் கொண்டுள்ளதாக தவிசாளர் கூறியுள்ளார்.

இதனையடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஊடகவியலாளரை செய்தி சேகரிக்க வாக்ககெடுப்பு எடுத்த விடயம் தவறு என்றும், இதனை வன்மையாக கண்டிப்பதாக கூறி, அடுத்த அமர்வுக்கு குறித்த ஊடகவியலாளரை யார் எதிர்த்தாலும் கொண்டு வருவோம் என்று கூறி சபை அமர்வில் இருந்து வெளிநடப்பு செய்ததுடன், எதிராக வாக்களித்த உறுப்பினர்கள் இல்லாத சமயத்தில் குறித்த ஊடகவியலாளரை சபை மண்டபத்தினுள் அழைத்து வந்து தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் தவிசாளர் சபை அமர்வு நிறைவு பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.

பிராந்திய ஊடகவியலாளரை சபைக்கு செய்தி சேகரிக்க அனுமதிப்பதற்கு வாக்களிக்கும் போது அமைதியாக இருந்து வாக்களித்து விட்டு பின்னர் வாக்கெடுப்பு தோல்வியுற்ற நிலையில் சபையில் குழப்பகரமாக செயலை செய்து சபையை விட்டு வெளிநடப்பு செய்வது நியாயமான செயலா என்று தவிசாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் பின்னர் சபை உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேறியுள்ளனர்.