இரண்டாயிரம் ரூபாவுக்கு மேல் நிலுவை காணப்படின் மின் துண்டிப்பு: வவுனியா பிரதான மின் பொறியியலாளர்

Report Print Thileepan Thileepan in சமூகம்

மின்சார கொடுப்பனவுகள் சீராக செலுத்தப்படாது மின் பட்டியலில் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் நிலுவை காணப்படின் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படும் என வவுனியா, மன்னார் மாவட்ட பிரதான மின் பொறியியலாளர் மைதிலி தயாபரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவின் நான்காம் கட்டை, கற்பகபுரம், குழுமாட்டுச்சந்தி, பாராதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக சுமார் 20 இற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு மின்

துண்டிப்பு மேற்கொள்வதற்கு முன்னதாக எந்தவித முன்னறிவித்தலும் தமக்கு வழங்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன், முன்னறிவித்தலின்றி மின் துண்டிக்கப்படுவதால் தாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா, மன்னார் மாவட்ட பிரதான மின் பொறியிலாளர் மைதிலி தயாபரன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, எமது மின்சார சபை ஊழியர்களால் மின் பட்டியல் கொடுப்பனவுகள் நிலுவையில் உள்ளவர்களுக்கான மின் துண்டிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

குறிப்பாக ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ளவர்களுக்கு மின் துண்டித்தலுக்கான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இருப்பினும் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் மின்பட்டியல் கொடுப்பனவு நிலுவையில் உள்ளவர்களுக்கே மின் துண்டிப்பை தற்போது முன்னெடுத்துள்ளோம். கடந்த வருட இறுதியில் அறவிடப்பட வேண்டிய மின் பட்டியல் நிலுவைகள் வவுனியாவில் இடம்பெற்ற அசாம்பாவிதம் காரணமாக சீராக அறவிடப்படவில்லை.

அதனால் மின் பட்டியலில் நிலுவையில் உள்ள பணத்தை அறவீடு செய்வதற்கான வழமையான நடைமுறைகளின் படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், முன்னறிவித்தல்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.