வவுனியா வடக்கில் நடமாடும் நீதிமன்ற நடவடிக்கையை ஏற்படுத்த பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் முடிவு

Report Print Thileepan Thileepan in சமூகம்

மாதத்தில் இரண்டு தடவை வவுனியா வடக்கில் நடமாடும் நீதிமன்ற நடவடிக்கையை முன்னெடுக்க பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் த.தர்மேந்திராவின் ஒழுங்குப்படுத்தலில் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் தர்மபால செனவிரட்ன தலைமையில் வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போது முன்னர் வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் நடமாடும் நீதிமன்றம் இயங்கியது. ஆனால் யுத்த நடவடிக்கைகள் காரணமாக அது பின்னர் கைவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மாதத்தில் இரண்டு நாட்கள் வவுனியா வடக்கில் நடமாடும் நீதிமன்றத்தை ஏற்படுத்தி தருமாறு கிராம மட்ட பொது அமைப்புக்கள் உதவிப் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதனை குறித்த அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தீர்மானத்திற்காக முன்வைத்த போது இது தொடர்பான கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அபிவிருத்தி குழுத்தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வவுனியா வடக்கில் நடமாடும் நீதிமன்றத்தை அமைப்பதற்கான அனுமதியை வழங்கியதுடன், அது ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் உதவிப் பிரதேச செயலாளர் குறித்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட நீதிபதிகளுடன் பேசி விடயத்தை முன் நகர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டது.