மன்னாரில் போலி வாக்குப்பதிவுகளை நீக்கிய கிராம உத்தியோகத்தருக்கு ஒரே நாளில் இடமாற்றம்!

Report Print Ashik in சமூகம்

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலையீட்டின் காரணமாக மன்னாரில் போலி வாக்குப் பதிவுகளை நீக்கிய கிராம உத்தியோகத்தர் ஒருவர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரியமடு கிராமத்தில் கடமையாற்றிய கிராம அலுவலகரான எஸ்.லுமாசிறியே இவ்வாறு ஒரே நாளில் அரசின் அழுத்தம் காரணமாக அவசரமாக கோவில் குளம் கிராமத்திற்கு இடமாற்றம் செய்யபட்டுள்ளார்.

நேற்று முன்தினம் திகதியிடப்பட்ட கடிதமொன்றின் மூலம் புதிய பிரிவிற்கு கடமைக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளார்.

மிகவும் வினைத்திறன் மிக்க கிராமசேவகர் என அந்த கிராம மக்களிடம் நற்பெயரைப் பெற்ற கிராம அலுவலகர் மாற்றப்பட்டதன் பின்னணியில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பெரியமடு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள குறித்த அரசியல்வாதியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட சிலரின் போலி வாக்குப் பதிவுகளை நீக்கி தேர்தல் சட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்தியதன் காரணமாகவே கிராம அலுவலகரை, நாடாளுமன்ற உறுப்பினர் தலையீடு செய்து மாவட்ட செயலகத்தினூடாக இடமாற்றம் செய்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இன்னும் சில தினங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ள நிலையில் வேண்டுமென்றே ஒரே நாளில் இடமாற்றத்துக்கான ஆணை வழங்குவது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்பதனால் சில ஜனநாயக விரும்பிகள் இந்த பிரச்சினை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.