மன்னார் நகர சபையினர் மற்றும் சனிவிலேஜ் கடற்படையினர் இணைந்து மன்னாரில் பாரிய சிரமதானப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
இன்று காலையில் குறித்த சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பிரதான வீதியில் இருந்து தாழ்வுபாடு வரையான பிரதான பாதையில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது பிரதான வீதியின் இரு பகுதிகளிலும் காணப்பட்ட பற்றைகள் வெட்டப்பட்டு துப்பரவு செய்யப்பட்டதுடன், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
மேலும் உக்காத பிளாஸ்ரிக் பொருட்களையும் கடற்படையினர் சேகரித்துள்ளனர்.
குறித்த சிரமதான நிகழ்வில் மன்னார் நகர சபையின் முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், சனிவிலேஜ் கடற்படை முகாமின் கட்டளை அதிகாரி ரி.பி.தீகல, மன்னார் நகர சபையின் சுத்திகரிப்பு பணியாளர்கள் மற்றும் கடற்படை வீரர்கள் இணைந்து சிரமதான பணியை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.