வவுனியா மாவட்ட ஊழலற்ற மக்கள் அமைப்பின் தலைவர் மீது கிராம சேவகர் தாக்குதல்!

Report Print Theesan in சமூகம்
118Shares

வவுனியா மாவட்ட ஊழலற்ற மக்கள் அமைப்பின் தலைவர் மீது கிராம சேவகர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா மாவட்ட ஊழலற்ற மக்கள் அமைப்பின் தலைவர் க. பார்த்தீபன், நேற்றைய தினம் கிராம சேவகரொருவர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா அலியார் மருதமடு குளத்தின் கீழான வயல் நிலத்தில் நேற்றைய தினம் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வது தொடர்பிலான கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஊழலற்ற மக்கள் அமைப்பின் தலைவரும் குறித்த குளத்தின் பங்காளருமான க.பார்த்தீபன் கிராம சேவகரை கூட்டத்தில் இருக்க கூடாது எனவும், அவரே கிராமத்தில் பிரச்சினைகளை உருவாக்குகின்றார் என தெரிவித்ததுடன், அவர் ஊடகங்களுக்கு எவ்வாறு கருத்து தெரிவிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது கிராம சேவகருக்கும்,ஊழலற்ற மக்கள் அமைப்பின் தலைவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பார்த்தீபன் மீது கிராம சேவகர் தாக்குதல் நடத்த முற்பட்ட வேளையில் இருவரும் சபையினருக்கு முன்பாக பிரதேச செயலாளருக்கு முன்பாகவே கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது குறித்த கைகலப்பில் காயமடைந்த பார்த்தீபன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் கிராம சேவகர் தன்னை பார்த்தீபன் தாக்கியதாக தெரிவித்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றபோது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளரிடம் எமது பிராந்திய செய்தியாளர் தொடர்புகொண்டு வினவியபோது,

அலியார் மருதமடு குள சிறுபோக நெற்செய்கை தொடர்பாக நேற்றைய தினம் கூட்டம் ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இக்கூட்டம் இடம்பெறுவதற்கு முன்னர் க.பார்த்தீபன் கிராம சேவையாளருடன் தன்னால் இருக்க முடியாதுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதன்போது கிராமசேவகரும், பார்த்தீபனும் எனது சொல்லை செவிமடுக்காது வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், இருவரும் தள்ளுப்பட்டுக்கொண்டிருந்தனர். இதன்போது யார் முதலில் அடித்தது என்று எனக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.