திருவள்ளூர் மாவட்டத்தின் மாதவரம் ரவுண்டானா புதிய புறநகர் பேருந்து நிலையம் அருகே தனியார் இரசாயன மற்றும் எண்ணெய் களஞ்சியசாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தீயை அணைக்கும் பணிகளில் மாதவரம், செங்குன்றம், மணலி, அம்பத்தூர், வியாசர்பாடி, கொருக்குபேட்டை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 500 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இரசாயன களஞ்சியசாலையில் கொள்கலன்கள் வெடித்து சிதறியதில் அருகிலுள்ள பிளாஸ்டிக் களஞ்சியசாலை, அலுமினிய களஞ்சியசாலை போன்றவற்றுக்கும் தீ பரவியுள்ளது.
இந்த அனர்த்தத்தால் அப்பகுதியில் கரும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இருபதுக்கும் மேற்பட்ட தண்ணீர் டேங்கர் லாரிகள் மற்றும் நோயாளர் காவு வண்டிகள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.
மேலும், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், அடுத்த ஒரு மணிநேரத்தில் தீ முழுமையாக அணைக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு குறிப்பிட்டுள்ளார்.