வவுனியாவில் பெற்றோல் குண்டு தாக்குதல்! ஆவா குழு எனவும் பெயர் பதிப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் சுவரில் ஆவா குழு என பெயர் பதிக்கப்பட்டுள்ளது.

இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பண்டாரிக்குளம், கூமாங்குளம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் முன்னால் மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் அவ்விடத்தில் நின்றுவிட்டு வீட்டு முன்பாக பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வீட்டு சுவரில் ஆவா 001 என பெயரையும் பதித்துள்ளனர்.

அத்துடன் வீட்டில் இருந்தவர்களை கூப்பிட்டதாகவும், வீட்டில் இருந்தவர்கள் அச்சத்தினால் வெளியில் வராமையால் கேட் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதிக்கு சென்ற அயலவர்கள் வீட்டாருடன் பேசி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பண்டாரிக்குளம் மற்றும் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னடுத்துள்ளனர்.

விசாரணைகளின் போது மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்த இளைஞர் ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.