கேப்பாபுலவு மக்களுக்கு ஐநா மனித உரிமைகள் பேரவை நீதி பெற்றுக்கொடுக்க வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்

Report Print Vanniyan in சமூகம்
38Shares

ஐ.நா மனித உரிமைகள் பேரவையும், சர்வதேச சமூகமும் வாழ்விடத்துக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட முல்லைத்தீவு, கேப்பாபுலவு மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, கேப்பாபுலவு மக்கள் இராணுவம் அபகரித்துள்ள நிலங்களை விடுவிக்க வேண்டும் என தெரிவித்து கடந்த 2017 மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்றுடன் மூன்று வருடங்களை தொடும் நிலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்கள்.

இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

கேப்பாபுலவு மக்கள் தமது பூர்வீகமான காணிகளை விடுவிக்கும்படி தொடர்சியாக மூன்று வருடங்கள் போராடி இன்றுடன் நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கின்றார்கள்.

இந்த மக்களுக்கு சொந்தமான பூர்வீக நிலத்திலே அந்த மக்களுக்கு சொந்தமான வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து நிர்க்கதியான நிலையிலே யுத்தம் நிறைவடைந்து பத்து வருடகாலமாக வாழ்வதற்கான எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் இருக்கின்றார்கள் .

இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இணை அனுசரணை வழங்கிய வேளையில் இந்த நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் விடுவிப்போம் என்று வாக்குறுதி வழங்கியது. ஆனால் இன்னும் இந்த நிலங்கள் விடுவிக்கப்படவில்லை.

உலக சமாதானத்துக்காக உருவாக்கப்பட்ட ஐநா மனித உரிமை பேரவை இலங்கையின் கேப்பாபுலவில் மக்களின் வாழ்விடங்களை இராணுவம் கையகப்படுத்தியிருக்கின்ற வேளையில் ஒரு மனிதன் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளான உணவு, உடை, உறையுள் இந்த அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றது என்பதை உணரவேண்டும்.

யுத்தம் நிறைவடைந்து பத்துவருட காலமாக இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கியநாடுகள் சபைக்கு வழங்கிய வாக்குறுதிகளை தொடர்சியாக ஏமாற்றிக்கொண்டிருப்பதை சர்வதேச சமூகம் பார்த்துக்கொண்டு தொடர்சியாக மௌனம் காத்திருக்க முடியாது.

யுத்தத்தாலும் பாதிக்கப்பட்டு நிலங்களையும் இழந்து இருக்கின்ற கேப்பாபுலவு மக்களுக்கு அரசாங்கமும் சர்வதேச சமூகமும் விசேடமாக ஐநா மனித உரிமைகள் பேரவையும் மக்களுக்கான இந்த நிலங்களை விடுவிப்பதற்குரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

தொடர்சியாக இலங்கை அரசாங்கம் நல்லாட்சியிலும் கூட கடந்த நான்கு வரவுசெலவு திட்டத்திலும் யுத்த காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைவிட இரண்டுமடங்கான நிதியை பாதுகாப்பு தரப்புக்கு ஒதுக்கி வந்திருகின்றது. அதற்க்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி இராணுவம் பொதுமக்களின் காணிகளில் தங்களின் கட்டடங்கள் முகாம்களை அபிவிருத்தி செய்வதற்கு இந்த பாதுகாப்பு நிதியிலிருந்துதான் பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்தி முகாம்களை அமைத்துவருகின்றது.

ஆகவே இலங்கை அரசாங்கத்தினுடைய பாதுகாப்பு நிதிக்கு தமிழ் பரராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதற்காக பேரம்பேச வேண்டியவர்கள் பாராளுமன்றத்திலே வரவு செலவு திடத்துக்கு ஆதரவை வழங்கியுள்ளார்கள்.

அதேபோன்று ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் இணைஅனுசரணை வழங்கிய விடயங்களுக்கு கூட தமிழ் மக்களின் பிரநிதிகளாக இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் 2021 வரை கால நீடிப்பை பெற்றுக் கொடுத்திருந்தார்கள்.

கடந்த நான்கரை வருடகாலமாக நல்லாட்சி அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருமே பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை கடந்த நல்லாட்சி அரசாங்கம் கவிழ்கின்ற பல நெருக்கடிகள் வருகின்ற நேரங்களில் கூட அரசை பாதுகாப்பதில் குறியாக இருந்தார்களே தவிர பாதிக்கப்பட மக்க்ளுக்காக பேரம் பேசவில்லை.

தற்போது இருக்கின்ற ஜனாதிபதி பிரதமர் இன்னும் இந்த மக்களை நடுர்த்தெருவில் விடாது இந்த மக்களுக்குரிய நிலங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐநா மனித உரிமைகள் பேரவை தொடர்சியாக இன்னும் இந்த அரசுக்கு கால நீடிப்பை கொடுத்து இந்த மக்களை நிற்கதியற்ற நிலைக்கு தள்ளாமல் இருப்பதற்கு ஐநா மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச சமூகமும் தொடர்ந்து மௌனத்தை கலைத்து பாதிக்கப்படட மக்களுக்குரிய நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார் .