மட்டக்களப்பு தேவாலயத்துக்குள் நுழைந்த 2 முஸ்லிம் பெண்கள் உட்பட நால்வரால் ஏற்படுத்தப்பட்ட பதற்றம்

Report Print Rakesh in சமூகம்
451Shares

மட்டக்களப்பு செபஸ்டியன் தேவாலயத்தில் இன்று ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது சந்தேகத்துக்கிடமான முறையில் தேவாலயத்திற்குள் நுழைந்த நால்வரால் பதற்ற நிலை ஏற்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்துக்கு அருகில் அமைந்திருக்கும் புனித செபஸ்ரியன் தேவாலயத்தில் இன்று காலை ஆராதனை இடம்பெற்றுள்ளது.

இதன்போது தேவாலயத்துக்குள் இரு முஸ்லிம் பெண்கள் உட்பட 4 பேர் நுழைந்துள்ளனர். அதனால் தேவாலயத்துக்குள் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஆராதனையில் ஈடுபட்ட மக்கள், அருட்தந்தையூடாக பொலிஸாருக்கு தகவலை தெரியப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பெண், அவரின் 39 வயதுடைய வாய் பேசமுடியாத மகள், 23 வயதுடைய மகன், 33 வயதுடைய மருமகன் ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது.

பொலிஸார் அவர்களிடம் தொடர்ந்தும் மேற்கொண்ட விசாரணையின்போது, மகளின் நோயைக் குணப்படுத்துவதற்காக இரு மோட்டார்சைக்கிள்களில் சீயோன் தேவாலயத்துக்கு அவர்கள் சென்றுள்ளதாகவும், அங்கு ஆராதனைகள் முடிந்து ஆலயம் பூட்டப்பட்டிருந்ததையடுத்து, ஆராதனை வேறு இடத்தில் நடப்பதாக அறிந்து இந்தத் தேவாலயத்துக்குள் வந்தனர் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகநபர்கள் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதோடு, இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.