தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் பல விளையாட்டு போட்டிகளில் பிரகாசிக்கும் யாழ். இளைஞர்கள்

Report Print Theesan in சமூகம்
100Shares

வடமத்திய மாகாணத்தில் நடைபெற்றுவரும் 31ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் தட்டெறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடத்துகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த வியாழக்கிழமை வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் இன்றைய தினம் இடம்பெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் மிதுன்ராஜ் என்ற இளைஞன் 42.50 மீற்றர் தட்டெறிந்து தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

அதேவேளை யாழ். மாவட்ட வீரர்கள் தேசிய ரீதியில் பல விளையாட்டுக்களிலும் தமது திறமையை காண்பித்து பிரகாசித்து வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 20 வயதுக்கு மேற்ப்பட்ட ஆண்கள் பிரிவில் 110 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் யாழ்பாணத்தை சேர்ந்த ர.சதீசன் 3ஆம் இடத்தை பெற்றுள்ளார்.

சனிக்கிழமை இடம்பெற்ற 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் நீளம் பாய்தல் போட்டியில் 4.23 மீற்றர் தூரம் பாய்ந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த அ.நர்மதா 3ஆம் இடத்தை பெற்றுள்ளதுடன், 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பிரிவு தட்டெறிதல் போட்டியில் 28.40 மீற்றர் தூரம் தட்டெறிந்து யாழ்பாணத்தை சேர்ந்த ர.சுஜிபா 3ஆம் இடத்தை பெற்றுள்ளனர்.

இதேவேளை பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் தங்க பதக்கத்தையும், ஆண்களுக்கான வலைப்பந்து போட்டியில் தங்க பதக்கத்தையும், பெண்களுக்கான கயிறுழுத்தல் போட்டியில் தங்க பதக்கத்தையும், பெண்களுக்கான கிரிக்கட் போட்டியில் இரண்டாமிடத்தினையும், ஆண்களுக்கான கரம் போட்டியில் 3ஆம் இடத்தினையும் பெற்று தேசிய விளையாட்டு விழாவில் யாழ்ப்பாணம் மாவட்டம் பிரகாசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.