விமான பயணிகளை தொழு நோய் வைத்தியசாலைக்கு கொண்டு வருவதை எதிர்க்கும் பிரதேச மக்கள்

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா வைரஸ் பரவி வரும் நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சகல பயணிகளையும் கண்காணிப்பதற்காக ஹெந்தலையில் உள்ள தொழு நோய் வைத்தியசாலைக்கு கொண்டு வரும் தீர்மானத்தை எதிர்த்து பிரதேசவாசிகள் இன்று ஹெந்தலை ஹேக்கித்த வீதியை மறித்து வைத்தியசாலைக்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பிரதேசம் ஜன நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால், கொரோனா வைரஸ் தொற்றி இருக்கின்றதா என்பதை கண்டறிய பயணிகளை இந்த வைத்தியசாலையில் தங்க வைப்பது பொருத்தமற்றது எனவும், மக்கள் நடமாட்டம் இல்லாத பிரதேசம் ஒன்றை இதற்காக தெரிவு செய்யுமாறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழு நோய் வைத்தியசாலைக்கு அருகில் பாடசாலை, தேவாலயம், கண் வைத்தியசாலை, கோயில் என்பன இருப்பதால், கொரோனா கண்காணிப்பு நிலையத்தை ஏற்படுத்துவது மக்களின் வாழ்வுக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு சென்ற பொலிஸ் அங்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

இத்தாலி, தென் கொரியா, ஈரான் போன்ற நாடுகளில் இருந்து வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை ஹெந்தலை தொழு நோய் வைத்தியசாலையில் 14 நாட்கள் தங்க வைத்து கண்காணிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.