சீனப் பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்திய அரசியல்வாதி பிணையில் விடுதலை

Report Print Steephen Steephen in சமூகம்

சீனப் பெண்ணொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ரத்தரன் என்ற வீரசிங்க ஆராச்சிகே நிஷாந்த புஷ்பகுமார, அவரது சாரதி சுதா என்ற விதானகே கெலும் சமீர ஆகியோரை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.

சந்தேக நபர்களை தலா 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 5 லட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையிலும் விடுதலை செய்யுமாறு காலி மேலதிக நீதவான் பவித்ரா சஞ்ஜீவனி பத்திரன இன்று உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்களின் கடவுச்சீட்டுக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கூட்டாக இணைந்து 36 வயதான சீனப் பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சீனப் பெண் கடந்த 2018 ஆண்டு இலங்கை வந்துள்ளார். முதலில் சந்தேக நபரான முன்னாள் மாகாண உறுப்பினருக்கு அறிமுகமாகி அவரது வீட்டில் சில காலம் தங்கியுள்ளார். பின்னர் காலி களுவெல்ல பிரதேசத்தில் வீடொன்றில் வசித்து வந்துள்ளார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அவரது சாரதியும் பெண் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று அவரை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதுடன், உணவட்டுன பிரதேசத்தில் நடைபெற்ற விருந்தொன்றில் கலந்துக்கொண்டுள்ளனர்.

இதனிடையே 2019 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி காலி பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு சென்ற சீனப் பெண் தன்னை மேற்படி சந்தேக நபர்கள் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி, 2019 ஆம் மே மாதம் 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதுடன் விசாரணைகளை முடித்து சட்டமா அதிபருக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.

இதனடிப்படையில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன மற்றும் சட்டத்தரணி ஸ்ரீமால் விஜேசேகர ஆகியோர் ஆஜராகியிருந்தனர். இந்த வழக்கு எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினரான ரத்தரன் என்ற வீரசிங்க ஆராச்சிகே நிஷாந்த புஷ்பகுமார, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.