யாழ்ப்பாணத்தில் மத ரீதியான சுவரொட்டி: கெபே அமைப்பு முறைப்பாடு

Report Print Steephen Steephen in சமூகம்
624Shares

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட மறுதினத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் பல பிரதேசங்களில் மதவாத ரீதியான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவதாக கெபே அமைப்பு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், சாவக்கச்சேரி, கொடிகாமம் மற்றும் கைதடி பிரதேசத்தில் இந்த சுவரொட்டிகளை காண முடிகிறது. சிவ சேனை என்ற அமைப்பு இந்த சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது.

“எந்த தேர்தலும் சைவ வாக்காளர்களே வாக்களிப்பீர் சைவ வேட்பாளருக்கே” என அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மகீன், இவ்வாறான சுவரொட்டிகள் மூலம் தேர்தல் ஒன்றின் சுதந்திரம் மற்றும் நியாயத்திற்கு கடும் அழுத்தங்கள் ஏற்படும் என கூறியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் 43 வீதமான கிறிஸ்தவர்கள் தமிழ் மக்கள் இருக்கின்றனர். அந்த மக்களை குறிவைத்து ஒட்டப்பட்டுள்ள இப்படியான சுவரொட்டி காரணமாக உண்மையான மக்களின் நிலைப்பாடுகள் சிதைந்து போகும் நிலைமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், இந்த சுவரொட்டி சம்பந்தமாக கெபே அமைப்பு நேற்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மனாஸ் மகீன் குறிப்பிட்டுள்ளார்.