இந்திய எல்லையில் மீட்கப்பட்ட கச்சத்தீவுக்கு சென்ற பக்தர்களின் படகுகள்

Report Print Steephen Steephen in சமூகம்

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்ற வருடாந்த உற்சவத்தில் கலந்து கொண்ட இலங்கையர்களுக்கு சொந்தமான 7 டிங்கி படகுகள் இந்திய கடல் எல்லைக்குள் சென்ற நிலையில், அதனை மீட்ட இந்திய கடலோர காவற்படையினர், அவற்றை இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த படகுகள் கச்சத்தீவு கடல் எல்லையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, நேற்று மாலை அலையில் அடித்துச் சென்றதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவை மன்னார் மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களில் இருந்து வந்த படகுகள் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தேவாலயத்திற்கு வந்தவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமது படகுகள் காணாமல் போயுள்ளதாக கடற்படையினரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த படகுகள் கச்சத்தீவில் இருந்து ஒரு கடல் மைல் தொலைவில் காணப்பட்ட நிலையில், அவற்றை இந்திய கடலோர காவற்படையினர் கைப்பற்றி இருந்ததாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லெப்டினட் கமாண்டர் இசுரு சூரிய பண்டர தெரிவித்துள்ளார்.

கடற்படையினர் இது குறித்து இந்திய கடலோர காவற்படையினருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து படகுகளை அவர்கள் இலங்கை கடற்படையினரிடம் கையளித்துள்ளனர்.

படகுகளை கொண்டு வந்த பின்னர் அவற்றில் வந்தவர்கள், தமது பிரதேசங்களுக்கு திரும்பிச் சென்றுள்ளனர். சரியான முறையில் நங்கூரம் இடப்படவில்லை என்பதால், படகுகள் அலையில் சென்றுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.