ஜனநாயக படுகொலையை அரசு விரும்புகிறதா? தமிழ் ஊடகவியலாளர் சங்கம் கேள்வி?

Report Print Theesan in சமூகம்

ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் கட்டுப்படுத்துவதன் மூலம் மீண்டும் ஒரு ஜனநாயக படுகொலையை இந்த அரசு விரும்புகிறதா என வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

வவுனியாவில் பணியாற்றும் சில ஊடகவியலாளர்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் அண்மையில் அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதற்கு கண்டனம் தெரிவித்து வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரபாகரனுடைய படத்தையும், விடுதலைப்புலிகளின் கட்டுரைகளையும் வெளியிட்டதற்காக கடந்த வாரம் வவுனியாவை சேர்ந்த சில ஊடகவியலாளர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனை நாம் வன்மையாக கண்டிப்பதுடன், ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான இவ்வாறான செயற்பாடுகள் நாட்டின் ஜனநாயகத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் எதிரான செயற்பாடாக அமைந்திருப்பதாகவே நாம் கருதுகிறோம்.

நாட்டில் உண்மை செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு சுதந்திரம் மறுக்கப்படுவதுடன், உண்மை நிலைப்பாடுகளை மக்களுக்கு அறியத்தர முற்படும் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக தமிழ் ஊடகங்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் உள்ளாகி வருகின்றது.

ஏற்கனவே இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர்கள் கைது, காணாமல் போதல், கொலை செய்யப்படல் போன்ற சம்பவங்களிற்கு இதுவரை நீதியான விசாரணைகள் இடம்பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்படாத நிலையில், ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல்களும், கட்டுப்பாடுகளும் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.

நாட்டினுடைய நான்காவது தூண் என்று சொல்லப்படுகின்ற இந்த ஊடகத்துறை சுதந்திரமாக செயற்படும் போதே நாட்டின் சுயாதீன தன்மையும், ஜனநாயக பண்பும் பேணப்படும் சூழல் உருவாகும், அதனை ஏற்படுத்துவதற்காக ஊடகவியலாளர்கள் முன்நகரும் போது அவர்கள் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு விதமான அச்சுறுத்தல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இது நிறுத்தப்பட வேண்டும்.

ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் கட்டுப்பாடுகளின்றி, தமது பணியினை முன்னெடுப்பதற்கு உரிய தரப்புகள் வழிவகை செய்ய வேண்டும் என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.